மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், இன்னும் மீட்டர் கேஜ் பாதைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, இந்த பட்ஜெட்டிலும் அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கான நிதி சொற்பமாகவே உள்ளது. மிக முக்கிய மூன்று திட்டங்களுமே கண்டு கொள்ளப்படாமல் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீட்டையே பெற்றுள்ளன. தமிழக எம்.பி.,க்களின் பாராமுகமும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கு விடிவு எப்போது கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் மட்டுமே இருந்தன. நாட்டின் பிற மாநிலங்களில் எல்லாம், ரயில் பாதைகள் அகலப் பாதைகளாக, அப்போதே மாற்றம் பெற்றுவிட்டபோதிலும், கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தமிழக ரயில் பாதைகள் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தன. இந்த சூழ்நிலையில், ரயில்வே இணையமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த வேலு இருந்தபோது, இவ்விஷயத்தில் ஒருவித தீர்வு கிடைக்க ஆரம்பித்து, தற்போது தமிழகத்தில் 60 முதல் 65 சதவீதம் வரை அகலப் பாதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன.
பல ஆண்டு சோகம்: தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்று முக்கிய அகலப்பாதை ரயில் திட்டங்கள் உள்ளன. அதில், முதலாவது மதுரை - கோவை இடையிலான திட்டம். பழமையும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்நகரங்களுக்கு இடையே, அகலப்பாதை இல்லை என்ற சோகம், பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை தற்போது இரட்டைப் பாதை உள்ளது. திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி - கோவை வரையிலும், பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரையிலும் இரட்டைப் பாதை அமைக்கும் திட்டம், கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது
தாமதமாகும் முதலில் 750 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், ஆமை வேகத்தில் நடைபெறத் துவங்கியதால், திட்டச் செலவும் அதிகரித்து தற்போது 1,300 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. மொத்தம் 224 கி.மீ., தூரம் கொண்ட இந்த திட்டத்திற்கு, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வெறும் 70 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. இன்னும் 555 கோடி ரூபாய் கிடைத்தால் தான், திட்டத்தைப் பற்றி நினைத்தே பார்க்க முடியும். இந்த வேகத்தில் போனால், இந்த திட்டம் முடிவடைய நான்கைந்து ஆண்டுகள் வரையாகும்.
குரல் கொடுக்க யாருமில்லை: அடுத்தது மயிலாடுதுறை - காரைக்குடி அகலப்பாதை திட்டம். இந்தத் திட்டம் ஆரம்பித்த பிறகு, புதிதாக இரண்டு கிளைகளும் சேர்க்கப்பட்டன. அதாவது, நீடாமங்கலம் - மன்னார்குடி மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு பாதைகளும் அகலப்பாதை திட்டமாக்கப்பட்டன. மயிலாடுதுறை - காரைக்குடி அகலப்பாதை திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டால், தமிழகத்திற்கு நெடுக்குவாக்கில் மூன்றாவது லைன் கிடைத்துவிடும். சென்னையில் இருந்து தென்தமிழகம் செல்வதற்கு இரண்டு பாதைகள் ஏற்கனவே உள்ள நிலையில், இது மூன்றாவது பாதையாக மாறிவிடும். மயிலாடுதுறை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி என, சென்றுவிட்டால் போதும். ஏற்கனவே காரைக்குடி - மானாமதுரை பாதை தயாராக இருப்பதால், மானாமதுரையில் இருந்து விருதுநகர் சென்று தென்கோடி வரை இந்த பாதை மூலம் சென்று விடலாம். இந்த திட்டத்தின் அருமை சரிவர தெரியாமல், இது பற்றியும் பெரிய அளவில் குரல் கொடுக்க, தமிழக எம்.பி.,க்களில் யாரும் இல்லை. இந்த திட்டத்தில், மயிலாடுதுறை - திருவாரூர் இடையில் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திருவாரூர் - காரைக்குடி பணிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இந்த வேகத்தில் சென்றால், இந்த திட்டம் இன்னும் 10 ஆண்டுகளானாலும் நிறைவேறுவது கடினமே
அமைச்சரின் தொகுதி: இத்தனைக்கும், உள்துறை அமைச்சரின் சொந்த தொகுதி வழியாகவும் இந்தப் பாதை செல்கிறது. அவரது சொந்த ஊரான கண்டனூரும் கூட இதில் வருகிறது. அப்படியிருந்தும் கூட, இந்த ரயில் திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, செலவும் கூடிவிட்டது. தற்போது இந்த திட்டத்தின் செலவு 1,005 கோடி ரூபாய் வரை வந்து விட்டது. இதுவரைக்கும் 323 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் 70 கோடி தான் கிடைத்துள்ளது. இன்னும் 622 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
பெங்களூரை இணைக்கும் இன்னொரு திட்டம், கடலூர் - சேலம் இடையிலான அகலப்பாதை திட்டம். இந்த திட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. துறைமுக நகரான கடலூருக்கு பெங்களூருவுடன் இணைப்பை இந்த திட்டம் அளிக்கும். வர்த்தக நோக்கில் மிகப்பெரும் பயனை தமிழகத்துக்கு அளிக்கும் இந்த திட்டம், விருத்தாசலம் வழியாகச் செயல்படவுள்ளது. ஆனாலும், ஆமை வேகமே இந்த திட்டத்திலும் காணப்படுகிறது. 718 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டும் இதுவரை 160 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில், 5 கோடி தான் கிடைத்துள்ளது. இன்னும் 400 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இப்படி, தமிழகத்தின் மிக முக்கிய மூன்று திட்டங்களுமே கண்டு கொள்ளப்படாமல் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளன. தமிழக எம்.பி.,க்களின் பாராமுகமும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கு விடிவு எப்போது கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நன்றி: தினமலர்
1 பின்னூட்டங்கள்:
காரைக்குடி -மயிலாடுதுறை .இரயில்வே மார்க்கத்தின்
உட்பட்ட M P தொகுதிகளில் இரண்டு ஆளும் கூட்டணிகளில் உள்ளது ,
அதுவும் மந்திரிகள்,தொகுதி வேறு
.என்ன செய்ய அடுத்த முறை
M P ஆக போவதில்லை என்பதை அறிந்து கொண்டததால்
சுருட்ட வேண்டிய வேலையை பாப்போம் என இருக்கிறார்களோ ,, என்னவோ ..
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment