சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர் அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
1 பின்னூட்டங்கள்:
அடப்பாவியளா ..பாக்க ஆமை மாதிரில கடக்கு...!
ஸ்பீடுதான் ஆமைனா..படுத்து கடக்கும் ஸ்டைலும்
ஆமமாதிரில இருக்கு (திருநெல்வேலி ஸ்டைலில் படிக்கவும் )
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment