அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, August 20, 2011

பட்டுக்கோட்டை சென்றுவர ஆட்டோ கட்டணம் 250 = ஒருமாத ஏழை குடும்ப ஜீவாதாரத்திற்கு 250 ரூபாய்!

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகை 220லிருந்து 250 இந்திய ரூபாய் வரை என்பதை நாம் அறிவோம். இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத்தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். 
 
அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது.

கடந்த 1973-ம் ஆண்டிலிருந்து சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மாலின் நிதி ஆதாரம், அடிப்படை தாங்கள் வழங்கிவரும் ஜக்காத், ஃபித்ரா, ஸதகா, நன்கொடை, நேர்ச்சை, ஸ்பான்சர்ஷிப் நிதி உதவிகள்தான்.

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் வெகுதொலைவில் உள்ள ஊர்களிலிருந்தும் கூட நமதூருக்கு ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப் பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது நம்மில் அநேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது.

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக, நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.

அதிரை நகர ஏழை, எளிய மக்களுக்கு நிதியாக, பொருளாக உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதிகள் மாநாடு நடத்தவோ, வேறு காரியங்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. தங்களது உதவிகள் உத்திரவாதத்துடன் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன, அல்லது உரியவர்களுக்குப் பங்கிடப்படுகின்றன.

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழுதியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ளலாமே! இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி, பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!
அதிரை பைத்துல்மால் தொலைபேசி எண்: 04373 - 241690

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.