அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, August 14, 2011

"தமிழ் முழக்கம்' செய்த கவி.காமு.ஷெரீப்!



கவி.காமு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல், லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகாமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ்மக்கள் இருக்கிறார்கள்.

கவி.காமு.ஷெரீபைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான், அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' - இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய்மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப்போகுமா?', "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில் - யார் எழுதியது? என்று "குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.காமு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்துவிட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி.காமு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீச்வரம் என்னும் ஊரில் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய்-முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்-தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15-ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

"தமிழரசு' கழகத்துடன் இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி.காமு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்', "சாட்டை' போன்ற பரப்பரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காவியம் 1, அறிவுரைக் கடிதநூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி.காமு.ஷெரீப், கவிதைகள் மட்டும் எழுதவில்லை, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தொண்டைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத்தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல்காதர் போன்றோருக்குப் பிறகு கவி.காமு.ஷெரீபை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி.காமு.ஷெரீப். ""அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி' என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்'' என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

""கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்கவேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்'' என்று சொன்னவர் கவி.காமு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர். ""எனக்கென எஞ்சி நின்றவை - புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று'' என்றும், ""புதிய தமிழகம் தோன்றி உழைத்தவர்களில் ஒருவன் நான் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது'' என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் காமு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை "குடியரசு' ஏட்டில் 1934-ஆம் ஆண்டு வெளிவந்தது.

""கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்'' என்று சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிடுகிறார்.

""சீறாப்புராணம் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்'' என்று கி.ஆ.பெ. புகழ்ந்துள்ளார்.

""தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக'' என்று 1946-ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939-ஆம் ஆண்டில் "சந்திரோதயம்' என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். "அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956-இல் "சாட்டை' இதழில் எழுதினார். "தமிழில் பிறமொழிச் சொற்கள்' என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் தமிழ்முரசு - என அவர் கவிதை எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால், ம.பொ.சி.யின் தமிழ்அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையை "தமிழகக் களக்கவிஞர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை, சென்னையை மீட்ட ம.பொ.சி.யின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப்பெற்றார். திரு.வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார்; செய்வதுபோல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948-இல் அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்' நாடகத்தில் "திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி "ரிக்கார்டு'களுக்காக வசனமும், பாடலும் எழுதி, திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால், அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி' என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். "பெண் தெய்வம்', "புதுயுகம்' ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியதுபோல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை "மச்சசந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் காமு.ஷெரீப். "சிவலீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்; "பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான "காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக்கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது!

இளங் கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993-ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய, இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீபின் பெயர் நின்று ஒலிக்கும்.
நன்றி கலைமாமணி விக்கிரமன்

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.