அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, February 25, 2012

போலியோ - பட்டியலிருந்து இந்தியா நீக்கம்!


போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ கடந்திருக்கிற இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் இன்று நீக்கியது. 

டெல்லியில் இன்று காலை தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார். 

உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இன்று காலை கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கடந்த ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லாததால், போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார். 

முன்னதாக, போலியோ பாதிப்புள்ள 4 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் இந்தியா இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாத பட்சத்தில், 'இந்தியாவை போலியோ இல்லாத நாடு' என உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும். 

இதற்கு உரிய முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி நடேலா மேனாப்தே தெரிவித்துள்ளார். 

போலியோ ஒழிப்பில் வெற்றி கிட்டியதற்கு கூட்டு முயற்சியே காரணம் என்ற பிரதமர் மன்மோகன் சிங், 23 லட்ச தன்னார்வ தொண்டர்களுக்கே இந்த பெறுமைச் சேரும் என்று புகழாரம் சூட்டினார். 

"இந்தியாவில் மட்டுமின்றி, இந்தப் பூமியில் இருந்தே போலியோவை விரைவில் முற்றிலும் ஒழித்திட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

போலியோ இல்லாத இந்தியா!

இந்தியாவில் ஜனவரி 13, 2011-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இந்த வருடம் ஜனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்த பெருமுயற்சியால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.

அதேநேரம், ''போலியோவை ஒழித்துவிட்டோம் என்று நமது அரசுகள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. போலியோ என்பது சுழற்சி முறையில் தோன்றக் கூடியது. இந்த வருடம் போலியோ ஒழிந்தால், அடுத்த நான்கு வருடங்களுக்கு அந்தப் பாதிப்பு தோன்றாமல் இருக்கலாம். அதற்கு அடுத்த ஆண்டு போலியோ தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், போலியோ தடுப்பு மருந்துகளும் அதற்கான பிரசாரமும் தொடர வேண்டும்!" என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள்.

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் சிறந்த முன்னேற்றம்....?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.