நமதூர் அதிரையில் வசிக்கும் அநேகர் அடுத்தவேளை உணவை பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ ஆளுக்கொரு வீடு வேண்டும் என்று நிமிடத்திற்கொருமுறை யோசிக்கிறோம். பெண்ணுக்கு வீடு கொடுக்கும் கலாச்சாரம் பற்றி பலர் பல நேரங்களில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
இதன் காரணமாக நமதூரில் வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் ஒரு துறையாக கட்டுமானத்துறை திகழ்கிறது என்றாலும் அதில் முஸ்லிம் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் முதலாளிகள் என்று கட்டுமானத்தை பராமரிப்பவர்கள், மராமத்து வேலை செய்பவர்கள், வேலைக்கு ஆள் அனுப்பி கட்டுமானத்தை கட்டித்தருபவர்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள் என்று 'அனுபவ முதலாளி'களாக நம்மவர்கள் பலர் உள்ளனர். சமீப காலங்களில் தான் முறையாக கல்வி கற்ற கட்டிட கலைஞர்கள், கட்டிட (civil) இன்ஜினியர்கள் நமதூரில் சில கட்டிடங்களில் பொறுப்பெடுத்து அல்லது வேலை கிடைத்து கட்டிடம் கட்டி வருகின்றனர்.
தனது மகள், சகோதரிக்காக மறுமகன், மச்சான் வீட்டாரின் கடும் நெருக்கடியின் விளைவாக அவசர அவசரமாக வீடு கட்டித் தர பலர் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் தங்களது பணி நிமித்தம் கிடைக்கும் சொற்ப பணத்தில் சேமித்து ஒவ்வொரு மாதமும் ஒருபெரும் தொகையை அனுப்பி வீடு கட்டும் பணியை தொடங்க எண்ணி, அனுபவமில்லாத அல்லது குறைந்த செலவில் கட்டித்தருவதாக கூறும் நபர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.
என்னதான் அனுபவமிருந்தாலும் அதிகாரிகளை வளைத்துப்போட்டுவிடலாம் என்கிற இறுமாப்பில் சிலரும், அரசு நடைமுறைகளைப் பற்றி அறியாத அப்பாவி? 'முதலாளி'கள் சிலரும் இத்தொழிலில் இருப்பதால் இரத்தத்தை பிழிந்து உழைத்து அனுப்பும் உங்களின் பணம் கணிசமாக தண்டம் கட்டுவதற்கு செல்லக் கூடிய ஆபாயம்.
ஆம், கடந்த சில நாட்களாக புதிய கட்டிடங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மின்வாரிய அதிகாரிகள்,
1. புதிய கட்டிடங்களில் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு கமர்சியலாக பதிவு செய்துள்ளனரா என்று ஆய்வு செய்கின்றனர்.
2.புதிய கட்டிடத்தில் மின்இணைப்பு இன்னும் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், தண்ணீர் எங்கிருந்து எடுத்து உபயோகிக்கின்றனர் என்று பார்த்து பின் அது வேறொரு வீட்டிலிருந்து வந்தால் அந்த வீட்டு மின்னிணைப்பு கமர்சியலாக பதியப்பட்டிருக்கிறதா என்று பார்க்கின்றனர்.
3. ஏற்கெனவே பூர்த்தி ஆன வீடு, புதிதாக மேல் தளம் (மாடி) கட்டுவதாக இருந்தாலும் கமர்சியலாக பதியவேண்டும்.
மேற்கூறியவற்றில் மின் இணைப்பு கமர்சியலாக பதியப்பட்டிருக்காமல் இருக்கும் பட்சத்தில் தண்டத்தொகைகளை சராமாரியாக கணக்கெழுதி வசூலிக்கின்றனர். சில வீடுகளில் ரூ 50,000 வரை தண்டத்தொகை கட்ட சொல்வதாகவும் தகவல். பலர் ரூ 25,000 வரை தண்டத் தொகையை கட்டி அழுகின்றனர்.
அதிரையில் இதுவரை பல இலட்சங்கள் இவ்வாறு தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முறையாக அனுமதிபெற்று சில ஆயிரங்களில் முடியவேண்டிய செயலுக்கு கடுமையாக உழைத்த பணம் தண்டமாக போவதை யாரால் பொறுக்க முடியும். அதுவும் பணத்தை கொடுத்து பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்தபின்.
ஆகவே கட்டிடம் கட்டுபவர்கள் மின் இணைப்புகளை கமர்சியலாக பதிவு செய்வதுடன், அரசின் நடைமுறைகளை முறையாக அறிந்து வீண் சிரமத்தையும், மன உளைச்சலையும் தவிர்க்க அறிவுறுத்துகிறோம்.
நமதூர் மின்வாரிய அதிகாரிகளிடம் உங்களுக்கு கேள்விகள் ஏதும் இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் அவை அவர்களிடம் விளக்கம் கேட்டு இவ்வலைப்பதிவில் அறியத்தருகிறோம். இன்ஷா அல்லாஹ்.
ஆகவே கட்டிடம் கட்டுபவர்கள் மின் இணைப்புகளை கமர்சியலாக பதிவு செய்வதுடன், அரசின் நடைமுறைகளை முறையாக அறிந்து வீண் சிரமத்தையும், மன உளைச்சலையும் தவிர்க்க அறிவுறுத்துகிறோம்.
நமதூர் மின்வாரிய அதிகாரிகளிடம் உங்களுக்கு கேள்விகள் ஏதும் இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் அவை அவர்களிடம் விளக்கம் கேட்டு இவ்வலைப்பதிவில் அறியத்தருகிறோம். இன்ஷா அல்லாஹ்.
4 பின்னூட்டங்கள்:
இன்று வேலை நிமித்தமாக துவரங்குறிச்சி (முக்குடிசாலை ) EB போய் இருந்தேன் வேலை நேரம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு போய் விட்டனர் ஆனால் அங்கு பொறுப்பில் உள்ள அனைவரது மொபைல் நம்பரும் எழுதி நோட்டிஸ் போர்டில் ஒட்டி இருந்தது இது நம்போன்ற வெளி ஊர் வாசிகளுக்கு மிக உதவியாக இருந்தது .இது போல் நமது ஊரில் உள்ளாதா என்பது தெரியவில்லை
Why Should we register under commercial?
1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
--
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
மேற்கண்ட கட்டுரையின் “கரு” வைத்தான் யான் கவிதையாய்ப் படைத்தேன். அக்கட்டுரையைப் படித்து விட்டுச் சென்றது முதல் எனக்கு உறக்கம் வராமல் உள்ளத்தில் ஏதோ ஓர் உறுத்தலால் முழு இரவும் இப்பாடல் இயற்றவே ஒதுக்கினேன். அப்படி ஒரு வருத்தம் உண்டானது நம்மவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமெல்லாம் எப்படி அநியாயமாகவும் வீணாகவும் செல்கின்றது.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment