உயர் கல்விக்கும், எதிர்கால வாழ்வுக்கும் அடிப்படையாக இருப்பதால் பிளஸ்-2 தேர்வில் கிடைக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் விலைமதிக்க முடியாதது.
எனவே மார்ச் 8-ம் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பாடத்தைப் புரிந்து படிப்பதும், திட்டமிட்டு தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகள் குறித்து சிறப்பாசிரியர்கள் கூறும் அறிவுரைகள்:
இயற்பியல்:
இயற்பியலில் 1, 2, 4, 6, 7, 8, 9 ஆகிய பாடங்களில் இருந்தே 90 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெறும். 10 பாடங்களில் 6 பாடங்களைப் படித்தாலே 147 மதிப்பெண்களைப் பெற முடியும். 1, 4, 6, 8 ஆகிய 4 பாடங்களில் மட்டும் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.
இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள், பண்புகள் குறித்த கேள்விகளைப் படிக்கும் போதும், பதிலளிக்கும்போதும் அட்டவணை வடிவில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
10 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை முதல் இரண்டை நிதானமாகவும், அடுத்த இரண்டு விடைகளை வேகமாகவும் எழுத வேண்டும். இல்லாவிட்டால், 5, 3 மதிப்பெண் வினாக்களுக்கு நேரம் கிடைக்காது.
இயற்பியலில் சூத்திரங்கள் எழுதினால் ஒரு மதிப்பெண்ணும், 10 மதிப்பெண் வினாவுக்கான மையக் கருத்தை எழுதினால் 2 மதிப்பெண்களும் கிடைக்கும். எனவே, இவற்றை மனதில் வைத்துப் படிக்க வேண்டும் என்கிறார் சென்னை ஆழ்வார்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை (இயற்பியல்) ஆசிரியர் ஏ.சங்கர்.
உயிரியல்:
உயிரியலில் படம் வரையக் கூடிய வகை வினாக்களைத் தேர்வு செய்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். படங்களுக்கும் அதற்கான விளக்கத்துக்கும் தனித்தனியே மதிப்பெண் உண்டு.
படம் எளிமையாக இருந்தாலும் விளக்கத்தை மட்டும் தெளிவாக எழுதினால் போதும். வினாக்களுக்கான முக்கிய விளக்கத்தை மட்டும் எழுதினால் போதும்.
விடைகள் தெளிவாகவும், ஒன்று, இரண்டு என்று குறிப்பிட்டு விளக்கங்களைப் பிரித்து எழுதுவதும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொடுக்கும்.
தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை (உயிரியல்) ஆசிரியர் ஏ.காசி.
கணிதம்:
கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பின்னர் 10 மதிப்பெண் வினாக்களில் தெரிந்தவற்றை முதலில் எழுத வேண்டும். பிறகு 6 மதிப்பெண் வினாக்களில் தெரிந்தவற்றுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். அதன் பிறகே விடுபட்டவற்றுக்கு விடையளிக்க வேண்டும்.
அணிகளும் அணிக்கோவைகளும் பாடத்தில் கேட்கப்படும் 10 மதிப்பெண் வினாவுக்கு முடிந்தவரை கடைசியில் விடையளிப்பதே நல்லது.
ஏனெனில் அதில் பிளஸ், மைனஸ் குறியீடுகள் அதிகம் இடம்பெறும். அதில் ஏதேனும் சிறிய தவறு செய்தால் விடை தவறாகும்.
கணித சூத்திரங்களை மாறுபட்ட கலரிலோ, பெட்டிகள் போட்டோ தனியாகக் காட்டலாம். ஏனெனில் கணிதத்தில் ஸ்டேஜ் மதிப்பெண்கள் எனப்படும் ஒவ்வொரு வரிகளுக்குமான மதிப்பெண் முறை உள்ளது.
3 மணி நேரத் தேர்வை 2.45 மணி நேரத்திலேயே முடித்துவிட்டு எழுதியவற்றை சரிபார்த்துக் கொண்டால் முழு மதிப்பெண்களையும் பெற முடியும் என்கிறார் சேலம் குகை மேல்நிலைப் பள்ளி முதுநிலை (கணிதம்) ஆசிரியர் எம்.பனிமேதாஸ்.
வேதியியல்:
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும்போது சரியான விடை அல்லது அதற்கான எண்ணை எழுதினாலே போதும்.
3 மதிப்பெண் வினாக்களுக்கு பாரா வடிவில் பதில் எழுதாமல் ஒன்று, இரண்டு என்று பாயிண்டுகளாக பிரித்துக் கொடுத்தாலே போதும்.
"பீனால்" தயாரிக்கப்படும் முறை பற்றிய வினாவுக்கு அதற்கான சமன்பாடுகளை எழுதி அதற்கும் கீழே அவற்றுக்கான வேதியியல் பெயரை மட்டும் எழுதினாலே போதும்.
உரிய சமன்பாடுகளை எழுதி அதற்கான விளக்கத்தை எழுதினாலே போதுமானது. 10 மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 70-க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். அந்த கேள்விக்கு விடையளிக்க அனைத்தையும் படித்திருந்தால் மட்டுமே முடியும். வேதியியலைப் பொறுத்தவரை படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தேவையில்லை.
உதாரணமாக குரோமியம் பிரித்தெடுத்தல் என்பது போன்ற கேள்விகளுக்கு படங்களை பேனாவிலேயே வரைந்து கொள்ளலாம். பாகங்களையும் தனியாக எழுதாமல் அம்புக் குறியிட்டு அங்கேயே எழுதலாம். பக்கத்தை அழகுபடுத்துவதற்கு வேதியியலில் மதிப்பெண் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமப்புற மாணவரின் விடைத்தாள் சாதாரண கையெழுத்துடன், சமன்பாடு வரும் இடத்தில் பேனா, பென்சில், ஸ்கெட்ச் கொண்டு குறியீடு இடப்படாமலும் இருந்தது.
ஆனால், அந்த விடைத்தாளுக்கு 150-க்கு 150 மதிப்பெண் கிடைத்தது என்கிறார் நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை (வேதியியல்) ஆசிரியர் ஜி.கனகராஜ்.
தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா ?
எழுத்துப் பிழையாலும், அச்சுப் பிழையாலும் பொதுத் தேர்வு வினாத் தாள்களில் அர்த்தம் இல்லாத அல்லது தவறான கேள்விகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு இடம்பெறும் கேள்விகளுக்கு அது தொடர்பான ஏதேனும் பதில் எழுதியவர்களுக்கு மட்டுமே அந்த கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும்.
வெறுமனே கேள்வி எண்ணை மட்டும் எழுதிவிட்டு, பதிலுக்கான இடத்தை காலியாக வைத்திருப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்று தேர்வுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேள்வி தவறானதாகத் தோன்றும்பட்சத்தில் அந்தப் பாடம் தொடர்பான பதிலையோ, கேள்விக்கான பதில் இதுவாகத் தான் இருக்கக் கூடும் என்று தோன்றும் பதிலையோ எழுதிவிட்டு வருவதே நல்லது என்றார் அவர்.
Source : Day Magazine
2 பின்னூட்டங்கள்:
உயர் கல்விக்கும், எதிர்கால வாழ்வுக்கும் அடிப்படையாக இருப்பதால் பிளஸ்-2 தேர்வில் கிடைக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் விலைமதிக்க முடியாததே............
+2 தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற என் வாழ்த்தும் / துவாவும்
முறையாக ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று விடாமல் சீராக எழுதினால் வெற்றி நிச்சயம்....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment