ஷாஃபான் மாதம் 15 ஆம் இரவு நம்மவர்களால், மிக கோலாகலமாகக் கண்ணியப்படுத்தப்பட்டு, விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நூதனமான காரியங்களை பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.
"முன்னோர்களில் சிலர் இதனை உருவாக்கினர்" என்பதைத் தவிர திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ, இவற்றுக்கு ஆதாரம் கிடையாது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவற்றுக்கு ஆதாரம் உண்டா? என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால், படிக்காத மக்கள் எப்படி உண்மையை உணரமுடியும்? ஷாபான் 15 ஆம் இரவில் நன்மை என்ற பெயரால் நடத்தப்படும் காரியங்கள், குர்ஆன், ஹதீஸுக்கு உடன்பட்டதா? அல்லது முரண்பட்டதா? என்பதை, முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அதனை தெளிவு படுத்த விரும்புகிறோம்.
மூன்று யாசீன்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் மூன்று “யாசீன்” ஒத துன்பம், துயரங்கள் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆ செய்வது நமது வழக்கத்தில் இருந்து வருகின்றது. “இந்த இரவில் தான் “தக்தீர்” என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த இரவு மூன்று யாசீன் ஓதி மூன்று காரியங்களுக்காக துஆ செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. "லைலத்தில் கத்ரி" என்ற வசனத்தில் இடம் பெற்றுள்ள “கத்ரு” என்ற சொல்லுக்கு “தக்தீர்” என்பதே பொருள். இமாம் இப்னு கஸீர் உட்பட பல விரிவுரையாளர்கள் இந்தப் பொருளையே குறிப்பிடுகின்றனா. மனிதர்களின் ஓராண்டுக்கான விதியை நிர்ணயிப்பது ரமலான் மாதத்தில் வருகின்ற “லைலத்துல் கத்ரு” என்ற இரவில் தான். ஷஃபான் மாதம் வருகின்ற 15 ஆம் இரவில் அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, எந்த நம்பிக்கையில் ஷஃபான் 15ஆம் இரவில் விசேஷ துஆ ஓதப்படுகிறதோ, அந்த நம்பிக்கைக்கே எவ்வித ஆதாரமும் இல்லை.
ஷஃபான் 15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவாகளின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை சஹாபாக்களின் செயல்களிலோ, தாபியீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு எள்ளளவும் ஆதாரம் கிடையாது. இப்படிச்செய்வது நன்மையானது என்றால், நம்மை விட, நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் அதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர் தான் அதனை உருவாக்கினர்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த இரவில் 100 ரக் அத்துகள் தொழ வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவாகள் இப்படிச் சொன்னதாகக் கூறுவதும் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டதாகும்.
நன்மைகள் தானே!
தொழுவது, யாசீன் ஒதுவது, துஆ செய்வது போன்றவை நன்மைகள் தானே? அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணாணது என்பது எப்படி? என்று, நம்மில் மார்க்கம் கற்றோர் பெரும்பான்மையினரும் தமிழக முஸ்லிம்களில் பலரும் நினைக்கலாம். சற்று நிதானத்துடன் பின்வரும் விளக்கங்களைப் பொறுமையாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக் கொள்ளுமாறு, அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
எவர் நம்மால் ஏவப் படாத அமல்களைச் செய்கின்றாரோ அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: புகாரி,முஸ்லிம்
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித் அத்துக்களாகும். பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு , ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி,முஸ்லிம், நஸயீ.
இந்த இரவில் இத்தகு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின், நிச்சயமாக நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவாகள் நமக்குக் காட்டித் தந்திருப்பார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கட்டளையிடாத ஒன்றை கட்டளையிட்டவர்கள் யார்?
“அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக ஆக்குகின்ற கூட்டாளிகள் அவர்களுக்கு உண்டா?” (அல்குர்ஆன் 42:41) என்ற அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையையும் சீர்தூக்கிப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள், வணக்க வழிபாடுகளில் ஈடுபட “ரஜப்” மாத 27வது இரவையும், ரமலான் மாத 27வது இரவையும், வேறு சில இரவுகளையும் நாமாக உருவாக்கிக் கொண்டோம். இதுவரை நாம் எடுத்து வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இம்மாதிரி இரவுகளில் பிரத்தியேகமான வணக்க வழிபாடுகள் ஏதும் இல்லை என்பது தெளிவாகின்றது.
முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விசேஷ இரவு என்று கருதிக் கொண்டு செய்து வரும் போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல இறைவனை இறையஞ்சுகிறோம்.
பேராசிரியர் K. முஹம்மது இக்பால் மதனி, துபை.
நன்றி: http://tamilsalafi.edicypages.com/
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
4 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த பதிவில் சிறு சிறு எழுத்து பிழைகளைச் சரிச் செய்யவும்.
சிறு பிழைகள் திருத்தப்பட்டுவிட்டது, சுட்டிக்காட்டிய சகோதரருக்கு நன்றி.
பராஅத் இரவை எதிர்நோக்கி இருக்கும் நம் சமுதாயத்தவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக இருக்கட்டும் இந்த பதிவு. தக்க சமயத்தில் பதியப்பட்ட மிக அருமையான பதிவு.
இந்த விஷயத்தை ஒவ்வொருவரும் தன்னுடைய வீட்டில் இருக்கும் நபர்களிடம் தெரிவிப்போமாக!!!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment