Thursday, July 28, 2011
அதிரையில் தரமான கல்வி?????
(இக்கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகவோ,குற்றம் சாட்டவோ அல்ல.நம் அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது.)
நம் அதிரையில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.அதிலும் +2 வரை உள்ளவை இரு பெரும் கல்வி நிறுவனங்கள்.அந்த பள்ளிகளில் படித்து,இன்று வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளோர் பலர்.ஆனால் இன்று,தரமான கல்வியை தேடி,பெற்றோர் பள்ளிகொண்டான்,திருச்சி, சென்னை பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
தந்தையின் பணியும் சென்னையில் இருந்து,குடும்பமும் அங்கு இருந்தால் சரி.ஆனால்,பிள்ளையின் படிப்பை காரணம் காட்டி,அங்கு இடம்பெயர்வோர் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
கேட்டால்,நம் அதிரை பள்ளிகளில் கல்வியில் தரமில்லை என்று காரணம் சொல்கின்றனர்.தம் பிள்ளைக்கு தரமான கல்வி வேண்டும் என்பதற்காக,இங்குள்ள பலர் தம் அழகிய சொந்த வீடுகளை பூட்டி போட்டு விட்டு,வெளியூர்களில் ஆயிரங்களை கொட்டி வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
கணவர் வெளிநாடு சென்று,கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்,வாடகை கொடுத்தே வீணாகிறது.கணவர் வெளிநாட்டிலும்,மனைவி பிள்ளைகளோடும் தனியே வாடகை வீட்டில் இருப்பதால்,பாதுகாப்பு பிரச்சினையும் எழுகிறது. இதற்கு முன் வரை,நம்மூரில் தானே நாமும் படித்தோம்,நாம் முன்னேறவில்லையா?
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தன் சொந்த ஊரில் படித்தும் முன்னேறவில்லையா? ஆங்கிலம் தான் சரளமாக பேசவில்லையா?அவருக்கு அவர் ஊரில் கிடைத்த தரமான கல்வி,நம் பிள்ளைகளுக்கு,நம் அதிரையில் கிடைக்காதா?
அது யார் குற்றம்?அதிரையில் பிறந்த நம் குற்றமா?ஆசிரியர் குற்றமா?பள்ளி நிர்வாகத்தின் குற்றமா?
வருடக்கணக்கில் மாறாத பாடத்திட்டத்தில்,5 வருட வினாத்தாள்களை திருப்பி படித்தாலே போதும் பாஸாகிவிடலாம் என்ற ரீதியில் எளிதான வினாத்தாள் அமைப்பு, அப்படியும் சரியாக மார்க் எடுக்காத பிள்ளைகளை தனித்தேர்வு எழுத வைத்து விட்டு, மீதி மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண் பெறுவதும்,100% தேர்ச்சியும் இருந்தால்,அது தரமான கல்வியா? தரமான பள்ளியா?அதனால்,யாருக்கு என்ன பயன்?
தரமான கல்வி என்பது,நடைமுறை வாழ்வோடு தொடர்பு உடையதாக இருக்க வேண்டும் அல்லவா?வெறும் மதிப்பெண் மட்டும் இருந்தால்,உடன் வேலை தான் கிடைத்து விடுகிறதா?கல்வி தரமாக இருந்தால்,நம் பிள்ளைகள் சுயமாக சிந்திக்கவும்,தன்னம்பிக்கையோடு சுயமாக செயல்படவும்,ஆற்றலை கொடுக்க வேண்டும்.
அதற்கு ஏட்டுக்கல்வியோடு தொழில் சார்ந்த பல்துறை அறிவும் கற்பிக்கப்பட வேண்டும்.
பெற்றோர் தாம் கற்றதை விட தம் பிள்ளை மேம்பட்ட கல்வியை கற்க வேண்டும் என நினைக்கின்றனர்.ஆனால்,நம்மூரில் கல்வித்தரம் நாம் பெற்றதை விட இப்போது கீழ்நோக்கி போய் கொண்டு இருக்கிறது.
நாம் படித்த போது இருந்த ஆசிரியர்கள் தம் பணியை சேவையாக நினைத்து செய்தார்கள்.ஆனால் இப்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் சேவையாக நினைத்தாலும்,பலர் அதை தொழிலாக செய்கிறார்கள்.இலக்கண வகுப்பைக் கூட இனிமையாக நடத்தும் ஆசிரியர்கள் நமக்கு கிடைத்தார்கள்.ஆனால் இன்று?
பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.அவ்வாறு நடத்தினால்,பாடம் நடத்தி முடித்த பின் ஆசிரியர் கேட்கும் அத்தனைக் கேள்விக்கும்,நம் பிள்ளை கோனார் உரை இல்லாமல்,நோட்ஸ் இல்லாமல்,சரியான பதில் அளிக்குமே!இப்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் பாடம் நடத்தி முடித்த பின் பிள்ளைகளிடம் நடத்திய பாடம் தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள்?கேட்டால் தானே சுயமாக பதில் சொல்லும் திறன் வளரும்?
கோனார் உரையில் அல்லது நோட்ஸில் உள்ள பதிலை தன் புரிந்துணர்வோடு சிறிது மாற்றி எழுதினாலே மார்க் கிடைப்பதில்லை.....இது தரமான கல்வியா?
நம்மூரில் சில பள்ளிகளில் பிள்ளை தவறான விடை எழுதினாலும் ஆசிரியரின் கவனக்குறைவால் சரி என டிக் போடப்படுகிறது. சில கேள்விகளுக்கு தவறான பதில் ஆசிரியராலேயே குறித்துக் கொடுக்கப்படுகிறது .ஒரு பள்ளியில் ஆங்கில வழி அரசு அங்கீகாரம் இன்றி நடப்பதோடு,சில பாடங்களுக்கு ஆசிரியரே நியமிக்கப்படாமல் உள்ளது.அங்கு பாடம் தமிழ் வழியில் தான் நடத்தப்படுகிறது.கட்டணம் ஆங்கில வழி என வசூலிக்கப்படுகிறது.
ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பிள்ளைகளின் தேர்வு விடைத்தாள்களை கூட திருத்துவதில்லை.சம்பந்தமே இல்லாத ஆசிரியரிடம் கொடுத்து திருத்தப்படுகிறது.இன்னும் சிலர்,நன்றாக படிக்கும் பிள்ளைகளின் பேப்பர்களை மட்டும் தாம் திருத்துவதும்,மற்ற பிள்ளைகளின் பேப்பர்கள் மற்றவர்களிடம் கொடுத்து திருத்துவதும் உண்டு.அப்புறம் எப்படி,அந்த பிள்ளைக்கு உரிய மார்க் கிடைக்கும்?
தன் பாட வேளையில் வகுப்பிற்கு வராத ஆசிரியரும் உள்ளனர். இப்படி குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவை கற்பனையல்ல.அப்பள்ளியில் இப்போது பயிலும்,அல்லது சென்ற ஆண்டுகளில் படித்த உங்கள் பிள்ளைகளை கேளுங்கள்.ஆம் என்று அடித்துச் சொல்வார்கள்.
நம் அதிரையில் பெரும்பாலும் தந்தை வெளிநாடு சென்று விடுவதால்,பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுவது தாய் தான்.
எத்தனை தாய்மார்கள் பள்ளி முடிந்து வீடு வரும் பிள்ளையிடம் அன்பாக பேசுகிறோம்?பிள்ளையிடம் உன் பள்ளியில் இன்று எத்தனை வகுப்புகள் நடந்தன?எல்லா பாடத்திற்கும் ஆசிரியர் உள்ளனரா?ஆசிரியர் வகுப்பிற்கு தவறாமல் வருகிறாரா?பாடம் புரிந்ததா?உனக்கு எந்த ஆசிரியர் நடத்துவது புரிந்தது?வீட்டுப்பாடம் உள்ளதா? என்றெல்லாம் அன்பாக கேட்டால்,அவர்களும் சொல்வார்கள். குறைபாடும் களையப்படும்.
சில தாய்மார்களுக்கு உண்மை தெரிந்தும்,யாரிடமும் முறையிட இயலாத நிலை.....ஆம்... தட்டிக் கேட்டால் தம் பிள்ளை ஆசிரியரால் பாரபட்சத்தோடு கவனிக்கப்பட்டு தம் பிள்ளையின் எதிர்காலம் வீணாகிடுமோ என்ற பயம்....
ஒரு ஆசிரியர் தன் சக ஆசிரியர் இது போன்ற தவறு செய்யும்போது அதை தட்டிக் கேட்கவோ,பிறரிடம் வெளிப்படுத்தவோ இயலாத நிலையும் உண்டு.பெரும்பாலும் இது போன்ற தவறு செய்வோர் அரசு ஊதியம் பெறுபவர்களாகவோ பணி மூப்பு அடிப்படையிலோ இருப்பதால்,சக ஆசிரியரின் மனிதநேயம் முடக்கப்படுகிறது.
அப்போ பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?
பள்ளி நிர்வாகம் தான்.
ஸ்கூல் பீஸை எவ்வளவு உயர்த்தலாம்,அதற்கு பெற்றோருக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று அடிக்கடி கூடும் பள்ளி நிர்வாகிகள்,அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.
தம் பிள்ளை நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.அது கடினமானதும் அல்ல.பள்ளிகளில் சிறு வகுப்பில் இருந்தே ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.அப்போது தான் நம் பிள்ளையாலும் ஆங்கிலம் பேச முடியும்.
தாய்மாரும் பீஸ் கட்டியதோடு சரி நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,அவ்வப்பொது பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் தம் பிள்ளை பற்றி விசாரிக்க வேண்டும்.
தந்தையும் சம்பாதித்து பணம் அனுப்பியதோடு,நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,விடுமுறையில் ஊர் வரும்போது பள்ளிக்குச் சென்றும்,தம் பிள்ளையிடம் விசாரித்தும் அவர்களின் கல்வி நிலையை அறியலாம்.
காலில் முள் குத்தியது என்பதற்காக காலை வெட்டி வீசுவதை விட,முள்ளை பக்குவமாக நீக்கிவிட்டு,காலுக்கு செருப்பு போட்டு நடப்பதே அறிவுடைமை...அது போல் அதிரையில் கல்வி தரமில்லை என்று புலம்புவதை விட,வேறு ஊர் பள்ளிக்கு இடம்பெயர்வதை விட,பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிரையிலேயே நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
புகழ்பெற்ற இரு பெரும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகமும் நம் சமுதாய நலனை கருத்தில் கொண்டு இதற்கான சில சீர்திருத்தங்களை செய்து குறைகளை களைய முயல வேண்டும்.
ஆசிரியர்களும் தம் திறமையை,அறிவை (update)புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சில மாணவர்களும் +2 வரை படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்துவிட்டு,கல்லூரிக்கு சென்ற பிறகு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக படிக்காமல்,சிறு வகுப்பில் இருந்தே ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால்,நம் அதிரையிலும் சொந்த வீடுகளில் இருந்தபடியே பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் சூழல் உருவாகும். பொருளாதார விரயமும் தவிர்க்கப்படும்.
அதற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!
ஆக்கம்: அதிரைத்தென்றல்.
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
1 பின்னூட்டங்கள்:
என்னுள்ளம் சொல்லும்; எழுத நினைத்தவை
இந்நூலில் கண்டு இயம்பு.
“கவியன்பன்” கலாம்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment