உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. எந்த நேரமும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அந்த பகுதி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம். சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 4 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர். இதன் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில் நெல்லை, சேலம் தவிர 8 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள நகராட்சி வார்டுகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சி வார்டுகள் புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 148 நகராட்சிகள், 125 ஆக குறைந்துள்ளன.
தற்போது 29 மாவட்ட பஞ்சாயத்துகளும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 620 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்காக 6 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. நகர் புற பகுதிகளில் ஓட்டுப்பதிவுக்காக 40 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளன.
கிராமப்புறங்களில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளுக்காக 5 லட்சம் ஊழியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. தற் போது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை, அம்பத்தூர் நகராட்சியை சென்னையுடன் இணைத்தது ஆகியவற்றை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் தீர்ப்பை மாநில தேர்தல் ஆணையம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
நன்றி: மாலைமலர்
நன்றி: மாலைமலர்
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment