அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 2, 2011

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவுகூறுவோம்








மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்
செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசா
மறைவு: 02-10-1986





சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியாத மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வருமுன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பல பணி ஆணை அச்சிட்டு,
படித்தோர்க்குப் பணி தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் இவரிடம்
மாட்டிக் கொண்டு குட்டுப்படும்!

வாசகத்தை இவர் எழுதிடின்,
திருத்துவோர் யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
மறுத்துரைப்போர் யாருமிலர்!

அலுவலகத்துக்கு ஓர் உடை,
விழாவுக்கு என்று ஓர் உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்.

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச்செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முதுகலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
ஆசீர்வதித்தார்; தலைமையாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம்முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!

---------------

பொக்கிஷமான நினைவுகள்














---------------

A.M. அப்துல் காதிர், M.A., BEd. (வாவன்னா)
முன்னாள் மாணவர், ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி

--------
நன்றி : தென்றல்
http://thendral.blogspot.com

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.