அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதிலும் "கிராம சுயராஜ்யம்'தான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு ஒரே தீர்வு என்பதிலும் கருத்து வேறுபாடே இல்லை. ஆனால், அது சரியான முறையில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி.
"பஞ்சாயத்து ராஜ்' இந்தியாவின் கிராமங்களைத் தரம் உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு அநேகமாகப் பொய்த்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.அதிகாரம் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக ஊழல் பரவலாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளாக பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்தியாவுக்குச் செய்திருக்கும் உதவி என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில்கூட செலவிடப்படாத அளவுக்குப் பணம் வேட்பாளர்களால் உள்ளாட்சித் தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறதே, அது ஏன்?தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிடுகின்றன என்றபோது அவரவர் தகுதி என்ன, பலம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ந்தோம்.
கணக்கற்ற வேட்பாளர்களின் கட்டுப்பாடற்ற பிரசாரம், இவர்கள் பேசாமல் கூட்டணி வைத்தே பிரசாரம் செய்திருக்கலாமே என்று நம்மை எரிச்சலடைய வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகள் எதுவும் இல்லாததால், ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரம் என்கிற பெயரில் வீணடிக்கும் பணம் நம்மை மலைக்க வைக்கிறது.சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எவ்வாறு இலவசத் திட்டங்களை அறிவித்தனவோ, அதற்கு இணையாக மேயர் வேட்பாளர்களும், நகர் மன்ற வேட்பாளர்களும், ஏன் பேரூராட்சி, ஊராட்சி உறுப்பினர்களும்கூட இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும், கொஞ்சம் பதற்றமாகவும்கூட இருக்கிறது.வீட்டுக்கு 3 கிலோ மாமிசம் இலவசம் என்கிறார் ஒருவர்.
வீட்டுக்கொரு சிம் கார்டு இலவசம் என்கிறார் மற்றொருவர். உங்கள் வீட்டுக்கு மூன்று வாரம் தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக ஊற்றுகிறேன் என்கிறார் ஒருவர். பெண்களுக்குத் திரையரங்குகளில் இலவசமாகப் படம் பார்க்கலாம் என்கிறார் மற்றொருவர். கல்யாணம், காதுகுத்துக்குப் பத்திரிகை வைக்கும் வார்டு வாக்காளர்களுக்கு ரூ. 2,000 மொய்ப் பணம் என்றுகூட ஒருவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள்.
தமிழகத்தில் பல நகராட்சிகளில், நகர்ப் பஞ்சாயத்துகளில் பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இவை எப்படிச் சாத்தியம்?மாநில அரசு இலவசங்களை அள்ளி வழங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மது விற்பனையால் கிடைக்கும் வருவாய். சுமார் ரூ.14,000 கோடி வருமானம் மதுவால் கிடைக்கும் என்றால், அரசாங்கம் எதை வேண்டுமானாலும் இலவசமாக அளிக்கும்தான். அதைப் பின்பற்றி, உள்ளாட்சியிலும் இலவசம் என்று இவர்கள் அறிவித்தால், இதை இவர்களால் எவ்வாறு செயல்படுத்த முடியும்?உள்ளாட்சிகளில் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசுக்குப் போகிறது.
அரசு ஒதுக்கும் நிதியில்தான் இவர்கள் திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். அப்படியிருக்க, வெற்றி பெற்றால் இவர்கள் எப்படித் தங்கள் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவார்கள்? அதுபோகட்டும், தனியொரு உறுப்பினருக்கு இப்படி வாக்குறுதிகளை அள்ளி வழங்க எங்கிருந்து வருமானம் கிடைக்கும்? ஒன்று அது பொய் வாக்குறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஊழலின் ஊற்றுக்கண் ஊராட்சி அமைப்பு என்று இருக்க வேண்டும்.சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர்களுக்கு சம்பளமே ரூ. 60 ஆயிரம் வரை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக சில கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் சேவை செய்ய வருவோருக்குச் சம்பளம் வெறும் டீச் செலவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அதிகார வரம்புகளும்கூட மிகக் குறைவுதான்.மேயருக்கு கார் உண்டு. வீடு உண்டு. அதற்கான செலவு மாநகராட்சி தரும். மாமன்றக் கூட்டம் நடக்கும் காலத்தில் மேயர், கவுன்சிலர்களுக்கு சிட்டிங் பீஸ் மட்டும்தான். அதிகபட்சம் மாதத்துக்கு இரண்டு கூட்டம் நடக்கலாம். இதில் ரூ,1,600 கிடைக்கும், அவ்வளவே.நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர்களுக்கு வாகன வசதி உண்டு. சம்பளம் ரூ.600-ஐத் தாண்டுவதில்லை.
இதேபோன்று நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்றால் அதற்கான பங்கேற்பு கட்டணம் மட்டும்தான். இதன்மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 கிடைக்கலாம்.பிறகு ஏன் இத்தனை போட்டி. என்ன தைரியத்தில் இவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்? எவ்வாறு பல லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைக்கிறார்கள்? மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்காக பல்வேறு திட்ட அமலாக்கத்துக்காக அரசு வழங்கும் நிதியில், தன் வார்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் ஒரு 10 விழுக்காட்டைப் "பார்த்தாலும்' போதும், இரண்டு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.ஆக, இலவசங்களையும், வாக்குறுதிகளையும் அறிவிப்பவர்கள் மிகமிக விவரமானவர்கள் என்பதையும் இவர்களது "நோக்கம்' தெளிவானது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களுக்கான தேவை என்ன என்பதை மன்றத்தில் எடுத்துரைக்கும் கட்டியக்காரர், அதிகாரிகள் மக்கள் பணத்தைச் சாப்பிட்டுவிடாதபடி கண்காணிக்க மக்களால் நியமிக்கப்படும் காவல்காரர். அப்படிப்பட்ட வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமே தவிர, ஊழல் பரவலாக்கப்பட்டு விடக்கூடாது.
நன்றி
தினமணி
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment