அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 16, 2011

தாய்மார்களே உஷார் !

மிகப் பிரபலமான ஒரு வாரப் பத்திரிக்கையில் “மம்மி வேண்டாம் டிவி போதும்” என்ற எச்சரிக்கை கட்டுரையைப் படித்ததும் சில விஷயங்களை அதிலிருந்து உள்வாங்கி அதோடு நமது வட்டார மொழியுடன் கோடிட்டும் காட்டிடத்தான் இதனை பதிகிறேன்.

''உம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி. பதாகைகள் முன் அமரவைத்துப் பழகும் ம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள்.

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், ஆட்டோ டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம்.

இவைகள்தான் இன்றைய நிலையில் நிஜம், இப்படியாக சர்வசாதரமாக நமது இல்லங்களில் நடந்தேறும் அன்றாட நிகழ்வுகளை எத்தனை பேர் கண்கானிக்கிறீர்கள் அல்லது வீட்டிலுள்ளவர்களிடம் கலந்து பேசிக் கொள்கிறீர்கள்?

இன்னொரு அதிர்ச்சி இந்த விஷயத்தை அப்படியே அமோதித்த மனோதத்துவ மருத்துவர் இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தங்களைத்தானே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரிஎன்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.

ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட்செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?

'உம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்கஎன்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணமும் இதுதான்.

நல்ல விஷயங்களை டிவியில் அல்லது கணினியில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தச் சம்வங்களைச் சொல்ல வேண்டும். நல்ல விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.

தொடர் தொலைக் காட்சிகள் கானும் பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. தொலைக் காட்சி பார்ப்பதைக் குறைத்துக் கொள்!என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காதுஎன்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'உம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரி!என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. 'தப்பு செய்தாலும், உம்மா மன்னித்துவிடுவாங்க!என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டி லும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!'' என்று அறிவுறுத்துகிறார்.

நம் குழந்தை நமது வளர்ப்பில்தான் நமக்கு நன்மை செய்யும் ஆக... ஒவ்வொரு தருனத்தையும் பயனுல்லதாக பயண்படுத்திக் கொள்ள முயலுங்கள் உங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள், இனிமேல் யாருடைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள் ? உங்களுடையது சந்தோஷம் என்றால் உங்கள் குழந்தைகளை உங்கள் வசப் படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் சந்தோஷம் என்றால் நீங்கள் மாறிக் கொண்டு அவர்களை வசப் படுத்திடுங்கள்.

சரி, இதுமட்டுமா இன்னும் இருக்கிறதே சொல்வதற்கு சமீபகாலமாக திடீரென்று சிறு குழந்தைகளின் பார்வை இழைப்பு, கோளாறு, மழலையிலிருந்தே முகக் கண்ணாடி ! இவைகள் ஏன் !? சிந்தீர்ப்பார்களா பெற்றோர்கள் ?

2 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (அல்-குர்ஆன் 66:6)

நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.

கல்வி கற்பதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்திய அளவிற்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை! இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்:

‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’ (அல்-குர்ஆன் 39:9)

ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு உலகக்கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியில் 100 -ல் ஒரு பங்கு கூட இஸ்லாமியக் கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதில்லை என்றால் அது மிகையாகாது! நபி (ஸல்) அவர்கள் போதித்த அடிப்படை இஸ்லாமியக் கல்வியோடு சேர்ந்த உலகக் கல்வி தான் இரு உலகிலும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது.

அல்லாஹ் நம் அனைவர்க்கும் நேர்வழி காட்டுவானகவும் - ஆமின்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொலைக்காட்சியின் பிடியில் தொலைந்து வரும் சமூகங்களுக்கு இது ஒரு நல்ல ஆக்கமாக இருக்கும்..... பிள்ளைகளை தொல்லைகளாக நினைத்து தொலைக்காட்சியில் தொலைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.