அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, December 15, 2011

அணை உடைந்தால்... இந்தியா உடையும்!?

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது.


உண்மை 1: அணை, நோக்கங்கள், லாபங்கள்!

இந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால், இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான், நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான்.

தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில், கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால், அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டு, ஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!

முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.

தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!

உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!

பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது.

1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோது, கேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில், அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படி, புதிய வடிகால் மாடங்கள், மதகுகள் அமைக்கப்பட்டன. ஆக, பழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார். 

உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!

''அணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை 6 ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால், அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவே, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும், இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம், கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும், அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளி, ஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?

முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால், சற்றே பெரிய 4 குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?

தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.

புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு, நாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும், சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால், அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால், அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, அணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர் எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள், ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.

இவை தவிர, எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம், கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் 3 இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, ஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.

உண்மை 4: உடையப்போவது அணை அல்ல!

காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும்  1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால், இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை.

முல்லைப் பெரியாற்றில், அணை பலமாக இருந்தபோதே, அணை யைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண் டது தமிழகம். அணையைப் பலப் படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால், தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒருபோகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?

காவிரியோ, முல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோ, கேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்ல; நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.

ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண் கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

இனி செய்ய வேணடியது எனன?

 இரா.வெங்கடசாமி, நீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.

''நதிகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு, அங்குள்ள நீர் வளத்தை, தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.

முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோல, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின், தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் 4 அடி அதிகப்படுத்தி, நீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலே, நீர் வெளியேறும்படி செய்ய வேண்டும்.

நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழ, அகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''

நன்றி : ஆனந்த விகடன்

4 பின்னூட்டங்கள்:

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தண்ணீர் பங்கீட்டில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்ற வேண்டும்

தமிழகத்தில் கால்வாய்களை அகலபடுத்த ஆழபடுத்த வேண்டும் அதிலயும் தி மு க அறசு நிறைய ஊழல் செய்துள்ளது எந்த வேலையும் செய்யாமல் கால்வாயிகளை தூர்வாரியதாக கணக்கு காட்டி ஊழல் செய்தது கருனாநீதி அரசு அடுத்த ஆட்சி வந்தால் மலைவந்து மீண்டும் மணல் வந்துவிட்டது என்று சொல்லுவார்கள்

ஜெ. புஹாரி தமாம்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நபி(ஸல்) அவர்க்ளின் தீர்ப்பு....

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), 'ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, 'இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?' என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, 'ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகுவிட்டு விடுங்கள்)" என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர்(ரலி), 'குர்ஆனின் இந்த (திருக்குர்ஆன் 04:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது" என்றார்கள்.
அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.
(இந்த நபிமொழியை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப்(ரஹ்) என்னிடம், '(உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்' என்னும் (இந்த) நபிமொழியை அடிப்படையாகக் கொண்டே, 'தண்ணீர் கணுக்கால்கள் வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்டதாகப் பொருள்' என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டார்கள்' என்றார்கள்.
புகாரி-2362

4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

MOHI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முல்லை பெரியார் அணையின் உண்மை நிலை அறிய கீழ்கண்ட தொடர்பில் சொடுக்கவும் .இது தமிழ் நாடு பொது பணித்துறையின் ஆவணப்படம்.
http://player.vimeo.com/video/18283950?autoplay=1.

முஹைதீன் , தம்மாம் KSA

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அணையை கட்டிய வெள்ளையனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி இன்னும் இருக்கிறது.... கூறு கேட்ட கேரள துரோக மனப்பான்மையுடன் தமிழகத்தை வஞ்சித்தால்.... விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது திண்ணம்..... மேலும் கேரளா மக்கள் 60 சதவிகித / விழுக்காடு அளவிற்கு தமிழகத்தில் தேனிர் விடுதிகள் நடத்திவருவதை எண்ணி பார்க்க வேண்டும்.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.