அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, December 17, 2011

தலைப்புச் செய்திகள் - 16-டிசம்பர்-2011

ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மெத்வதேவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர்,  ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தகுதியானது என்றும், இந்தியா - ரஷ்யா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு எதிர்பாராத அளவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணு உலையின் முதல் யுனிட், ஓரிரு வாரத்தில் செயல்பட தொடங்கும் என்றும், 2 வது யுனிட் 6 மாத்தில் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளதைக் கண்டித்து, கூடங்குளம் பகுதி மக்கள் துக்கம் அனுசரித்து, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

***

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் மனுவை டெல்லி  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

***

மத்திய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய ப.சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால், நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் அமளி ஏற்பட்டது. 
***

மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது. இது, மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
***

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதற்கு விதிக்கப்பட இடைக்காலத் தடை நீடிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தற்போதை நிலையில், சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

***

சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பாரத ரத்னா விருதுகளுக்குத் தகுதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இனி, 'தனிமனித பெருமுயற்சிகள் கொண்ட எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும்', அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் என விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது. இதில், விளையாட்டுத் துறையும் அடங்கும்.

கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவை தொடர்புடைய சாதனையாளர்களுக்கே இதுவரை பாரத ரத்னா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

***

திருப்பூரில் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதுமாக கட்டுப்படுத்தம் நோக்கில், 15 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 127 கோடியே 40 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

***

பொருளாதாரச் சரிவை சமாளிக்கும் நடவடிக்கையாக, புதிய கடன் கொள்கையின்படி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வதில்லை என முடிவெடுத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதன் எதிரொலியாக, அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
***

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக, கேரளாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து, தேனியில் தடையை மீறி நடைப்பயணம் செல்ல முயன்ற விடுதலைச் சிறுத்தை இயக்க தலைவர் திருமாவளவன் உள்பட 1200 பேர் வெளிக்கிழமை கைது செய்யபட்டனர்.

இதனிடையே, கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கம்பத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்பத்தில் அமைதி பேரணி நடத்தினர்.

***

மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 345 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 94 புள்ளிகள் சரிந்திருந்தது.

***

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,610 ரூபாயாக இருந்தது.
****

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.