அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, November 11, 2011

துணைத் தலைவர் திரு பிச்சை அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!


ஒரு திறந்த மடல்!






நமதூர் பேரூராட்சியின் உறுப்பினர் மற்றும் தலைவர்கள் தேர்தல்கள் பல இழுபறிகளுக்கும் போட்டிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்து முடிந்து, மக்களின் தீர்ப்பாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியுள்ளீர்கள்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சித் தலைவர் முஸ்லிமாக இருந்தால், துணைத் தலைவர் முஸ்லிமல்லாதவராக இருக்கவேண்டும் என்பது, மத நல்லிணக்கத்தை விரும்பும் பொதுமக்களின் பொதுவான கருத்தாகும்.

நான் பொருளாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் இதனைத்தான் விரும்புகின்றது என்பதற்கு, எங்களின் பல அமர்வுகளின்போது சங்கத் தலைவரிடமிருந்து பரிந்துரையாக வெளிப்பட்ட கருத்தும் இதுவே.  நாங்கள் இதே கருத்தில் இருப்பதால்தான் உங்களைத் தெரிவு செய்வதில் ஒத்துழைப்பளித்தோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கலாம்.

நமதூரின் வலைத்தளங்களுள் ஒன்றான அதிரை பிபிசி உங்கள் தேர்வைத் தொடர்ந்து இவ்வாறு மகிழ்ச்சியுடன் குரிப்பிட்டிருந்த்தது:  "நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி… "

துணைத் தலைவராகிய நீங்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.  ஆனால், ஊர் நலம் என்று வரும்போது, இருவரும் இணைந்து செயல்படுவதே அறிவுடைமையாகும்.  அதை விடுத்து, ‘விட்டேனா பார்!’ எனும் போட்டி மனப்பான்மையைக் கையில் எடுத்துக்கொண்டு அதிரை வலைத்தளங்களுக்குப் பேட்டியளிப்பதும் பேசுவதும் நமதூரின் பாரம்பரியமான ஒற்றுமைக்குக் குந்தகம் விளைப்பதாகும் என்பதை நீங்கள் நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.

மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல், வெற்றி பெற்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு உங்கள் கட்சியில் தஞ்சம் புகுந்துகொண்ட சிலர் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றார்களோ என்ற ஐயமும் எமக்கு ஏற்படுகின்றது.  எது எப்படி இருந்தாலும், நமதூரின் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திறந்த மடலின் நோக்கம்.

பேரூராட்சித் தலைவர் தமிழகத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், துணைத்தலைவர் ஆளும் கட்சிக்காரராக இருப்பது, உள்ளூர்த் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் ஒத்துழைப்பைப் பெற உதவியாக இருக்கும் என்ற நற்சிந்தனையாலும், பொதுநல நோக்காலும்தான் உங்களைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்கள் பாடுபட்டனர் என்பதை மறந்துவிடாதீர்கள்!  பேரூராட்சித் தலைவருடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நீங்கள், ‘வைத்தேன், எடுத்தேன்’ என்று பேட்டிகளும் விமரிசனங்களும் கொடுப்பது அறிவுடைமையாகாது.

பொறுப்புகளும் பதவிகளும் வரலாம், போகலாம்.  ஆனால், மனிதம் பேணப்பட வேண்டும்.  மத நல்லிணக்கம் நிலவ வேண்டும்.  அதிராம்பட்டினம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அதற்கு வல்ல இறைவன் துணை நிர்ப்பானாக!

- அதிரை அஹ்மது

6 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏனுங்க, பே.து.த.பிச்சை அவர்களே !

தோற்றதும் இருந்த பக்குவம் அடுத்த வெற்றியான பே.து.த.கிடத்த பின்னர் இல்லாமல் போச்சே ?

அப்படின்னா பின்னால்தான் அல்லது தனியாகத்தான் ஓடுவீங்களா ? ஏன் முன்னாலிப்பருவருக்கு ஒத்துழைப்பாக உங்களின் ஒட்டத்தையும் நடையையும் அமைத்துக் கொள்ளுங்களேன்... அதையும் மீறி அத்துமீறல்கள் என்று வரும்பட்சத்தில் பேருராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் என்று ஒன்று உள்ளதே அங்கே உரைத்திடுங்களேன்.

நீயா / நானா ? என்ற தலைப்பில் எங்களையெல்லாம் மாறி மாறி ஒரு தொடர் எழுத வச்சுடாதீங்க எங்களுக்கும் சொந்த வேலைகள் கொஞ்சம் இருக்குங்க.

தலலவர் மற்றும் துணைத்தலவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவும், உங்களைப் போன்றோரின் பரபரப்பு அல்லது மாற்றி மாற்றி தூற்றல் எத்தனை நாட்களுக்கு அதனையும் புறந்தல்ல எங்களுக்கு எவ்வளவு நாட்களாகும் !!!?

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

well said.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

துணைப்பதவி என்பது எந்தப்பொறுப்பும் இல்லாத ஒன்று என்று சொன்ன நீங்கள் இப்போது பேட்டிகளைப்பார்க்கும் போது தலைமைக்கும் மிஞ்சின பேச்சாகத்தான் தெரிகிறது.சேர்மனின் (திமுக வினரல்ல) தனிப்பட்ட ஆதரவாளர்களும் துணைச் சேர்மனாக நீங்கள் வருவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்.ஆனால் விளைவு தலைகீழாக தெரிகிறதே.
இப்போதைக்கு திட்டங்கள் தலைமையில் ஆளும் காங்கிரசிடமிருந்து வந்ததா மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.விடமிருந்து வந்ததா அல்லது உள்ளாட்சியாளரின் முயற்சியால் வந்ததா என்பதையெல்லாம் பிரித்து பேசாமல் ஊருக்கு எப்படியோ வருகிறதா என்பதை மட்டும் பார்ப்பதே நன்மை தரும்.
50% காலம் கடந்து தலைவரால் பிரயோஜனமில்லை என்றால் அப்போது எதிர்கணைகளோடு தீவிர எதிர்ப்பில் இறங்கலாமே.
பொறுத்திருந்து கண்காணிப்பதே எதிர்காலத்தில் ஆளப்போவர்களுக்கு அழகு.

அபூ சுஹைமா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தேவையான நேரத்தில் அவசியமான கருத்துகள்.

தேர்தலுக்கு முன்புவரை சேர்மன் அஸ்லம் திமுகவைச் சார்ந்தவர் கிடையாது. அவர் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடவே சீட் கேட்டார். பின்னர் அதிமுகவின் சார்பில் போட்டியிட சீட் கேட்டார். இந்த இரு கட்சிகளிலும் கிடைக்காமல் போகவே, திமுக அவருக்கு வாய்ப்பளித்தது. திமுகவின் பலத்தால் மட்டுமே அஸ்லம் வெற்றி பெறவில்லை என்பதை சகோ. அஸ்லத்தின் ஆதரவாளர்களும் திமுகவின் எதிர்ப்பாளர்களும் நன்றாகவே அறிவார்கள்.

ஆனாலும் திமுகவின் மீதுள்ள அரசியல் பகையாலும் சகோ. அஸ்லத்தின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளாலும் சிலர், அவர் பொறுப்பேற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அவர் மீது தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.

தலைவரும் துணைத் தலைவரும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகமாகத் தென்பட்ட நிலையில் சில புல்லுருவிகள் இடையில் புகுந்து அரசியல் செய்கின்றனரோ எனத் தோன்றுகிறது.

ஊரின் நன்மைக்காக என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் இத்தகைய புல்லுருவிகளுக்குத் துணை போகாமல், தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே இணக்கமான சூழல் நிலவ முயல வேண்டும்

நமதூருக்கான தற்போதைய தேவை ஊரின் வளர்ச்சியே அன்றி, மமக அல்லது திமுக அல்லது அதிமுகவின் வளர்ச்சி அன்று என்பதை ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்யவேண்டும் என்பதில்லை பாலிடிக்ஸ் என்பது எங்கும் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு செய்யப்படும் பாலிடிக்ஸ் தொடங்கி, நாத்தனார், ஓர்படி என அனைவரின் பாலிடிக்ஸ்சையும் சமாளித்து நிமிர்வதற்குள் அலுவலகத்தில் பாலிடிக்ஸ் ஆரம்பமாகி விடுகிறது.

அலுவலகத்தில் அனைத்து தரப்பு பணியாளர்களும் ஏதாவது ஒருவிதத்தில் அரசியலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் அலுவலக அரசியல் என்பது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது. இருப்பினும் அந்த அரசியலை நாசூக்காக கையாண்டால் எங்கும், எதிலும் வெற்றிதான். இதோ நிர்வாகவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகள்:

இடம் பொருள் ஏவல்

நம்மிடம் இருந்தே வார்த்தைகளை பெற்று அதை நம்மை நோக்கி திருப்பிவிடும் அஸ்திரத்தை கற்றுக்கொண்ட எத்தர்கள் அதிகம் உண்டு. எனவே யாரைப் பற்றி எங்கு எப்போது பேசுகிறோம் என்பது முக்கியம். வீடோ, அலுவலகமோ, “யாகாவராயினும் நாகாக்க” இல்லையெனில் நாம் உபயோகித்த வார்த்தை நமக்கு எதிராக திரும்பும் ஜாக்கிரதை.

வேண்டாம் விவாதம்

உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்வதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறீகள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

சிறப்பான செயல்பாடு அவசியம்

அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே. உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.

அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தோமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

நிழல் விசயங்களில் கவனம்

அலுவலக அரசியலில் மிக சவாலான விசயம் என்னவெனில் நம்மைப் பற்றி புகழ்ந்து கொண்டே நமக்கு எதிராக செயல்படுபவர்கள் அதிகம் இருப்பார்கள். இதுதான் பெரும் சவாலான விசயம். எனவே உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்பொழுதான் அலுவலகத்தில் நமக்கெதிராக செயல்படும் நிழல் உலக 'தாதா'க்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

நேருக்கு நேராக சந்தியுங்கள்

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம். உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்தபட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக் கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

மு.செ.மு.அபூபக்கர்.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நெருக்கடியில் உதவுங்கள்

பிற துறையை சார்ந்தவர்கள் ஒரு வேலையை முடிக்க முடியாமல் திணறும் போது நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் உதவி செய்வது அவசியம். வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும்படி இது உதவும்.

சக அலுவலக நண்பர் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும். உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சினையின் சிக்கலை தீர்க்க வேண்டும்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள். உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம் எனவே குறைவாக பேசி அதிகம் கேட்கவேண்டும். எதையும், கேட்கவோ, சொல்லவோ மிகப் பொறுமையான தருணத்திற்காக காத்திருங்கள். அனைவரையும் சமமாக கருதுங்கள்

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம். எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா? எனவே எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அப்புறம் என்ன நீங்கள் தான் எதையும் சமாளிக்கும் சமாளிப்பு திலகம்.

மு.செ.மு.அபூபக்கர்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.