அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, November 10, 2011

பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


அன்புள்ள அதிரைப்பட்டினம் நகராட்சி தலைவர் சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு, எத்தனையோ ஆட்சியாளர்களை பார்த்து, பார்த்து வெறுத்து, என்றாவது நமதூருக்கு ஒரு விடிவுகாலம் வராதா..? என்ற கடைசித் துளி நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு துபாய்வாழ் அதிரைவாசியி(களி)ன் ஏக்க மடல்...
பதவி இல்லாமலே நமது ஊருக்காக ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் மேற்கொண்டு அது மாதிரி செய்தும் காட்டினீர்கள். எந்த மூலையில் நிலம் இருந்தாலும் அதை வாங்கிப்போட்டால் நாளை ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து கோடீஸ்வரராக உலாவரலாம் என்ற எண்ணமே அதிகப்படியாக இருக்கும் இக்கால சமூகத்திற்கிடையே தனது பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை பொதுநலத்துக்கு தாரை வார்த்தும், அதன் செயல்பாட்டில் தலையிடாமல் ஒதுக்கியிருந்தும், பெண்களின் மார்க்க விழிப்புணர்வுக்காக தன் சொந்த இடத்தையே ஒதுக்கியதையும் நன்கறிவோம். இது மாதிரி நல்லெண்ணம் மேலோங்கியிருக்கும் ஒரு நபருக்கு பதவியை கொடுத்தால் ஊரே செழிப்படையும் என்ற நல்லெணத்திலேதான் உமது வெற்றிக்காக பாடுபட்டவர்களும், ஓட்டுப்போட்டவர்களும் சொல்லும் காரணம். வரலாற்றில் முதல் முறையாக கடந்த 40 வருட காலத்தில் பெரும் அரசியல் பிண்ணனி இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறீர்கள்..! வாழ்த்துகள்.. வெற்றி பெற்று விட்டீர்கள்..! வரலாறு படைத்து விட்டீர்கள்..!! இது போதுமா? உங்களை இந்த ஏற்றத்த்தில் தூக்கி நிறுத்தி, வழக்கம் போல் கீழே காத்திருக்கும் எம் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..??

உங்களுக்குக் கிடைத்த இந்த பதவி சுகமா..? இல்லை சுமையா..?? இந்த கேள்வியை முன்னிறுத்தி வரலாற்றைத் திருப்பிப்பாருங்கள்..
எப்படி ஒரு ஆட்சி இந்தியாவிற்கு வேண்டுமென்று, மாகாத்மா காந்தி ஆசைபட்டாரோ, எந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று உலக வரலாறு இன்றும் கொண்டாடுகின்றதோ, அப்படி ஒரு ஆட்சியை அரேபியாவில் தந்த கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நொடியில், அப்படியொரு மகத்தான பதவி கிடைத்ததை நினைத்து அவர் மகிழவில்லை..! மாறாகத் தேம்பித் தேம்பி அழுதார்கள்.. “ அபுபக்கரே உம்மால் சுமக்க முடியாத ஒரு பாரத்தை, அல்லாஹ் என் மீது சுமத்தி விட்டான், இந்த சோதனையை நான் எப்படி கடக்க போகிறேன்..?..” என்ற உமர் (ரலி) அவர்களின் நிலைபாட்டை ஒரு பாடமாக்கிக் கொள்ளுங்கள்...

பதவி, அதிகாரம், அந்தஸ்து இவை எல்லாம், வல்ல இறைவனின் சோதனை தவிர வேறில்லை, மறுமையில் அவன் தந்த சோதனைக்கு கண்டிப்பாக கேள்வி பதில் உண்டு, அதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள் சகோதர்ரே...! எந்த வெற்றிக்கு முன்னும், பின்னும் பல சோதனைகள் காத்திருக்கும்... அப்படித்தான் உங்களுக்கும், ஆட்சியேற்ற மறு நொடியே உங்கள் முன் எண்ணற்ற சவால்கள்...அளவுக்கதிமான எதிர்பார்ப்பு.. என்ன செய்யப் போகிறீர்கள்..?

குப்பை, கழிவு நீர் பிரச்சனை, சுகாதார சீர்கேடு, சாலை சீரமைப்பு, இப்படி எத்தனையோ பிரச்சனைகள் கனவில் கூட வந்து பயமுறுத்தும்...எதிலிருந்து ஆரம்பிக்க, எதை முதலில் முடிக்க என்ற ஏராளமான குழப்ப நிலை நிலவும். ”நீங்க விடுங்க காக்கா-தம்பி நாங்க பார்த்து கொள்கிறோம்”..என்ற இடையூறுகள் கூட அவ்வப்போது நிகழும்...நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

உங்கள் முன்னிற்கும் பிரச்சனைகளில் பாதி சுத்தத்தைச் சார்ந்தது... இதில் பாதி வேலையை நீங்கள் செய்ய வேண்டும், மீதி வேலையை மக்கள் செய்ய வேண்டும். பாதி வேலையை கூட செய்ய முயலாத முந்தைய ஆட்சியாளர்களைப்போல் தயவு செய்து நீங்களும் இருந்து விடாதீர்கள். குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண ஊர் பெரியவர்கள், செல்வந்தர்கள் பொதுநலவாதிகள், அரசியல் வாதிகள், சமூக அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் இவர்களில் முக்கியமானவர்களை ஒன்று கூட்டுங்கள், ஈகோவை கலைந்து எல்லோருடனும் கலந்து பேசி பொதுவான முடிவுகளை எடுங்கள்..முடிந்தால் அவர்களை வைத்து ”அதிரை பொதுநல அட்வைஸ் கமிட்டி” ஒன்று அமைத்து அவர்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்று ஊர் நலத்திற்கு அவர்களின் மதிப்பு மிக்க பங்கினை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து சாலை சீரமைப்பு மற்றும் கழிவு நீர் தேக்கம்... இவை பொறியியல் துறையைச் சார்ந்தது. அரசு வேலைகளை காண்ட்ராக்ட் எடுக்கும் நிறுவனங்கள் ஏனோ தானோ வென்று வேலை செய்வதும் அதை கண்காணிக்க நியமித்திருக்கும் நபர்களும் அதற்கு துணை போவதுமே காரணம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஊரில் படித்த, இந்தத் துறைகளில் கைதேர்ந்த எத்தனையோ நபர்கள் உள்ளனர். அவர்களை ஒன்று கூட்டி அவர்களிடமிருந்து, ஆலோசனைகளை பெறுங்கள்...ஒரு சாலை, வேலை செய்யும் வேளை, கவனிக்க வேண்டிய விடயங்களை பட்டியலிடுங்கள்...நமதூரிலுள்ளவர்களின் தொழில் கல்வி அறிவை சிறிதேனும் ஊர் நலத்திற்கு பயன்படுத்த உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி தரும். இந்த வகையான ஆலோசனைகளில் வார்டு உறுப்பினர்களை பங்கேற்க செய்து வார்டு வாரியாக இந்த வேலைகளை பிரித்துக் கொடுத்து, இறுதி கட்ட வேலை முடுக்கத்தை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற விசங்களால் உங்களால் ஆரம்ப கட்ட சவால்களை தகுதியான ஆலோசனைகளின் மூலம் சமாளித்து விட முடியும்.
அடுத்து அரசு திட்டங்கள்...

அரசு திட்டமா..? அப்படி என்றால் என்ன..? இது தான் நம் சமூகத்தின் நிலை. நம்மில் பெரும்பானோர் அரசு திட்டங்களைப் பற்றி அறியாதவராகவே உள்ளனர். அதைத் தெரிந்தவர்கள் கூட அரசு திட்டங்களைப் பெருவது ஒருவகையான அவமானமென்று எண்ணுபவராகவே உள்ளனர். உண்மையில் அரசு வழங்கும் சலுகைகள்..நமக்கான உரிமைகள்..அதை ஏன் நாம் உதாசீனப் படுத்த வேண்டும்..? நிலவரி, வீட்டுவரி என்று அரசிற்கு எத்தனையோ வரிகளை கட்டும் நாம், அரசாங்கம் தரும் சலுகைகளை ஏன் வீணடிக்க வேண்டும்..?எனக்கு தெரிந்த சில அரசு சலுகைகள் இதோ:

• முதியோர் ஆதரவெற்றோர் உதவித்திட்டம் – மாதம் ஆயிரம் ரூபாய்.
• ஏழைப் பெண் திருமணம் – ரூபாய் 25000 ரொக்கம், 45 கிராம் தங்கம், இதுவே பட்டம் / மற்றும் பட்டயம் பெற்றோருக்கு –ரூபாய் 50000 ரொக்கம்.
• மீன் பிடி தடைக்கால மீனவர்களுக்கு – ரூ 2000 உதவித்தொகை
• மீன் பிடி அல்லாத கால மீனவர்களுக்கு – ரூ 4000 உதவித்தொகை
• கல்வி, மற்றும் மருத்துவ உதவித்தொகை.
• தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகள்

இவை எல்லாம் கற்பனை விசயம் அல்ல...தமிழ்நாடு பட்ஜட் 2011-12 –ல் குறிப்பிடப்பட்ட எண்ணற்ற திட்டங்களில் ஒரு சில உதவிகள் தான் இது.
இப்படி மக்களின் பார்வைக்கு எட்டாத அரசு திட்டங்களை ஆராய்ந்து அதை நமது மக்களுக்கு சென்றடையும் வகையில் ”அரசு திட்ட விழிப்புணர்வு” கூட்டங்களை வார்டு வாரியாக நடத்துவதுடன், அது அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செய்தல் வேண்டும்.

இவையல்லாது நமதூருக்கென்று பிரத்தேகமாக பொருந்தக் கூடிய , வெளிநாடு திரும்பியோர் மறுவாழ்வு, தொழில் உதவி திட்டம் இவை சார்பாக அரசிடமிருந்து சிறப்பு திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற முயற்சித்து, அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் அதிரை மக்களின் மனதில் மறக்க முடியாத பாகத்தில் பதிவாகி விடுவீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...
பாதாள சாக்கடை திட்டம் இந்த வார்த்தையை, வாக்குறுதியை கடந்த இருபது வருடங்களாக கேட்டு வருகிறோம் இது என்ன ஆனது...?
ஒரு மாநில பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம், நமதூர் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அடையாளம் தெரியாமல் போன கடந்தகால வரலாறுகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் - 2009-2010-லிருந்து அந்த திட்ட்த்திற்கான வரிகள் உங்கள் பார்வைக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்துவதென்ற இந்த அரசின் முடிவின்படி, முதற்கட்டமாக தற்போது ஆறு மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சியுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக முக்கிய நகராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்படி கைக்கு வந்து இழக்கப்பட்ட, இது போன்ற திட்டங்களை மீட்டுத்தர நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிரையை சிங்கப்பூராக்க வேண்டும், துபாயாக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மக்களுக்கு அப்படி அந்த நாட்டை மாற்ற அந்த மக்களின் ஒத்துழைப்பு எவ்வகையானது என்பதை நம் மக்கள் அறியும் வகை செய்தல் வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி கண்ட இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு நகராட்சி சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை அபதாரம் விதிக்க வேண்டும். சட்டம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் தான் குற்றங்கள் குறையும்.கடைசியாக ஒரு கோரிக்கை, ”ஆயிரம் பேரிடம் அறிவுரை கேளுங்கள் ஆனால் முடிவை மட்டும் நீங்களே எடுங்கள்” என்ற பொன் மொழிக்கிணங்க எல்லா அறிவுரைகளையும் ஆராய்ந்து நீங்களே ஒரு நல்ல முடிவெடுத்து ஊரை தலைநிமிர செய்ய வேண்டும், செய்வீர்கள்..! என்ற நம்பிக்கையுடன் இன்னும் இன்னும் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அத்தனையையும் ஒரே நாளில் உங்கள் முன் சுமத்த முயலாமல், நீங்களாவது எதாவது செய்வீர்கள் என்ற எதிர்பார்புடன் காத்திருக்கும்...

- துபாய் வாழ் அதிரைவாசி(கள்)

1 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடுமையான பாரத்தை சுமத்துகிறீர்கள் போலும், இன்னும் பஞ்சாயத் தலைவர் நன்றி அறிவிப்பே சரியா செஞ்சி முடிக்காத இந்த நேரத்துல அதுக்குள்ளே திட்டம் அது இதுன்னு வம்புல மாட்டிவிட்றீங்க. நீங்க குறிப்பிட்டது போல அவர் ஊர்த்தலைவர் ஆவதற்கு முன்னே நிறைய பொது சேவை செய்தார், அனால் அவர் முழு சுதந்திரத்தோட செய்தார்.

நினைவிற்கொள்ளுங்கள். .....
ஒவ்வொரு திட்டத்திக்கும் ஒரு சில அவகாசம், ஆவணம், கட்சி மாநிலத்தலைவர் ஒப்புதல், மாவட்ட தலைவர் ஒப்புதல், வட்ட செயலாளர் இசைதல், ஊர்கட்சியின் பொறுப்பாளர் மற்றும் செயல் வீரர்கள் அசைவு மட்டுமல்லாமல் எதிராளியின் பங்கு எந்த அளவுக்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்த்ததுக்கப்புறம்தான் ஒவ்வொரு திட்டத்தையும் செயல் படுத்தலாமா வேண்டாமா என்பதுதான் முடிவுக்கு வருவார். நிலைமை இப்படி இருக்க நம்ம தலைவர ரொம்ப போட்டு அழுத்தகூடாது.

நமதூருக்கு கொண்டு வரப்பட்ட திட்டத்தை செய்து முடிக்கவே எப்படியும் 30 வருடங்கள் ஆகும், அதில் நான்கில் ஒரு பங்கு செய்தாலே பெரிய விஷயம்.

புரியும்படியாக சொல்கிறோம்.....

ஒவ்வொரு அரசியல் தொகுதி உறுப்பினர்களும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் மந்திரம் என்ன தெரியுமா..... "தலைவர் முடியாதுன்னுட்டா தொகுதி மக்களுக்கு நான் என்ன பதில் சொல்றது"

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.