மேற்கண்ட மக்கள் விரோத போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் நம் ஊரில் நடந்தேறிவிடக்கூடாது என்பதே நம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவலும்.
மனிதர்களின் நல்ல காரியங்களையும், செயல்களையும் மனதார பாராட்ட மனம் இறங்கி வருவதில்லை. குறை சொல்ல மட்டும் ஏனோ சிம்மாசனம் இட்டு தானே அமர்ந்து கொள்கிறது.
கட்சிகள் பேதமின்றி, காழ்ப்புணர்ச்சியின்றி மற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக கருதாமல் எங்கெங்கெல்லாம் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட (கட்சிசார்ந்த, சாராத) தலைவர்கள் உள்ளனரோ அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு முழு பொறுப்பும், கடமையும் உண்டு. அப்பொழுது தான் நம் பாரதம் உள்நாட்டிலும், உலக அரங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.
மின் தட்டுப்பாடு ஒரு பிரதான பிரச்சினையாக நம் நாட்டில் இன்று இருந்து வருவதால் அதற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து அதை களைய முன்வர வேண்டும். இதில் நல்ல பெயரை யாரும் தட்டிச்சென்று விடுவாரோ? என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் தேவையில்லை. கல்வெட்டில் யார் பெயர் இருந்தால் என்ன? மின்வெட்டில்லா மாநிலமாக மாற்றிக்காட்டினால் நல்லது தானே?
ஊரில் அறிவிக்கப்பட்டோ அல்லது அறிவிக்கப்படாமலோ எந்நேரமும் வரும் மின்தடையும் அதைத்தொடர்ந்து வரும் கொசுக்கடியும் குறைந்த கால விடுமுறையில் ஊர் செல்லும் நம்மை ஓட,ஓட விரட்டி எங்கோ நாடுகடத்தி விடுகிறது. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமானமற்ற தன்மையையும், வெறுப்பையும் தற்காலிகமாக ஏற்படுத்தி விடுகின்றன. என்ன தான் தாய் தன் குழந்தையை கதற,கதற அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழந்தை அடித்த தன் தாயை கட்டித்தழுவ ஓடிச்செல்வது போல் நிறந்தரமாக தன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வந்து விடாது ஒரு போதும் நமக்கெல்லாம்.
பெரும்பாலான வீடுகளில் இன்வெட்டர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார தடையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்பத்தி செய்து தரும் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் எந்நேரமும் நிலவி வரும் மின்தடை பற்றி யாருக்கும் அக்கறையும், கவலையும் மற்றும் மக்களின் அல்லல்களை அரசின் கவனத்திற்கு ஜனநாயக முறையில் கொண்டு வர அவரவர் உள்ளத்தில் உருவாகி வெளியாகும் முயற்சிகள் இருப்பதாக தெரியவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி நம் விவேகமான முயற்சிகள் அவ்வப்பொழுது மட்டுப்படுத்தப்படுவது ஏனோ உண்மை.
வரும் காலங்களில் வரக்கூடிய தேர்தல் அறிக்கையில் "வீடுகளுக்கு இலவச இன்வெட்டர் (யு.பி.எஸ்) கருவி பொருத்தப்படும்" என்று சொல்லும் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மத்திய அரசு பதினான்காயிரம் கோடி செலவழிக்கும் வரை பல்லிளித்துக்கொண்டிருந்த மக்களும், அரசியல் கட்சிகளும் இன்று கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்க இருக்கும் இறுதி கட்ட நேரத்தில் வரிந்து கட்டிக்கொண்டு அந்த அணுமின் நிலையத்தை மூட களத்தில் குதித்திருப்பது வேதனையான வேடிக்கையன்றி வேறொன்றும் சொல்வதற்கில்லை.
மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.
நமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.
நல்லவைகளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் நமக்கொன்றும் நட்டம் இல்லை தானே?
மு.செ.மு. நெய்னா முஹம்மது
4 பின்னூட்டங்கள்:
நல்லதோர் அலசல்.... அதிரை என்பது ஓர் மாட்டு வண்டி அதில் இரண்டு....... ஒத்துளைத்தால்தான் அந்த வண்டி சீராக போகும் ...
ஊரின் வளர்ச்சிக்காக அதிரை நகர சேர்மனும் துனை சேர்மனும் ஒருங்கினைந்து செயல்பட வேண்டும் என்பது அனைவர்களின் எதிர்பார்ப்பு. நல்ல சிந்தனையுள்ள ஒரு ஆக்கத்தை கொடுத்த மு.செ.மு. நெய்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடந்து எழுதுங்கள்.
ஆண்ட கட்சியோ.... ஆளும் கட்சியோ.... ஆளுகையில் சரியில்லைஎன்றால் மாண்ட கட்சியாகி விடும் என்பது கடந்த கால வரலாறு இது உள்ளூர் நிர்வாகித்திருக்கும் பொருந்தும்....
விட்டுக் கொடுத்து - நடந்து கொண்டாலே நிறைய பிரச்சனைகளை தீர்க்கலாம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment