ஏற்கெனவே ஜெயலலிதா ஒரு நூலகத்தை அழித்துவிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே அவர் நடத்திய தலைமைச் செயலக மாற்றத்தால் அங்கு செயல்பட்ட பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் இருந்த அரிய ஓலைச்சுவடிகள், செம்மொழி நூல்கள், சங்க இலக்கியப் பழைய பதிப்புகள், பழைய இதழ்கள் தொகுப்புகள் யாவும் செல்லரித்துக்கொண்டு இருக்கின்றன. உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் மீது இப்போது அவர் கை வைத்திருப்பது தமிழ் அறிவுலகின் நூற்றாண்டுக் கனவு மீதான குரூரமான தாக்குதல்.
தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால், இன்றைய நவீன உலகில் 'நூலகம்’ என்ற சொல்லுக்கு உள்ள விரிவான அர்த்தத்தைக்கொண்டு இருப்பது அண்ணா நூலகம் மட்டும்தான். 172 கோடியில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களில் அமைந்து இருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களைவைக்கும் கொள்ளள வைக்கொண்ட இதில், இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம். இங்கு உள்ள புத்தகங்களின் மதிப்புக்கு ஓர் உதாரணம் 'என்சைக்ளோபீடியா ஆஃப் ஹ்யூமன் பயாலஜி’. மருத்துவம் தொடர்பான இந்த நூல் தொகுதியின் விலை எவ்வளவு தெரியுமா? 1,99,545.
பசுமைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் உள்ள ரம்மியமான சூழலும் நல்ல நூலக அறிவைக்கொண்ட இதன் ஊழியர்களின் ஒத்துழைப்பும் தமிழகத்தின் வேறு எந்த நூலகத்தின் சூழலோடும் ஒப்பிட முடியாதவை.
ஒரு வாசகருக்கு அண்ணா நூலகம் எவ்வளவு நெருக்கமானது என்பதைச் சொல்ல, இங்கு உள்ள சொந்த நூலகப் பிரிவையும் பார்வையற்றோருக்கான பிரிவை யும் குறிப்பிடலாம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களைக் கொண்டுவந்து இங்கு படிக்க முடியும். பெரும்பாலும் வீடுகளில் வாசிப்புக்கு ஏற்ற சூழல் இல்லாத நம் சமூகத்தில், ஒரு வாசகர் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓர் அறையில் அமர்ந்து தன்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டுச் செல்லலாம் என்பது எவ்வளவு அற்புதமான வாய்ப்பு!
சுமார் 500-க்கும் மேற்பட்ட பிரெய்லி புத்தகங்களையும் நாம் விரும்பும் புத்தகத்தைப் பார்வையற்றோருக்கான பிரெய்லி வடிவில் மாற்றித் தரும் இயந்திரத்தையும் கொண்ட பார்வையற்றோருக்கான பிரிவு, அவர்களுக்குக் கிடைத்த பரிசு.
அண்ணா நூலகத்தின் மிகச் சிறந்த பிரிவு குழந்தைகள் பிரிவு. செயற்கை மரம், பறவைகள், குரங்குகள் என 15,000 சதுர அடிப் பரப்பளவிலான இந்தப் பிரிவில், 50 ஆயிரம் புத்தகங்கள், ஏராளமான கணினிகள் இருக்கின்றன. குழந்தைகள் இங்கு நீதிக் கதைகளைப் படிக்கலாம், கணினியில் பார்க்கலாம், அறிவுசார் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
நூலகம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியான அன்றைய தினம் நான் நூலகத் துக்குச் சென்றிருந்தேன். குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள். வறிய தோற்றத்தில் ஒரு சிறுமியும் செழுமையான தோற்றத்தில் ஒரு சிறுவனும் படித்துக்கொண்டு இருந்த மேஜையை நோக்கிச் சென்றேன்.
''உன் பேர் என்னப்பா?''
''ஸ்ரீவத்சன்.''
''வீடு எங்கே இருக்கு?''
''மாம்பலம்.''
''உன் பேர் என்னம்மா?''
''அனுசுயா.''
''உன் வீடு எங்கே இருக்கு?''
''இங்கதான் பக்கத்துல...''
''எங்கே?''
''(தயங்கித் தயங்கி...) கோட்டூர்ல... சேரில..!''
ஒரு சமூகத்தில் உண்மையான சமத்துவம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஜெயலலிதாவின் முடிவு நேரடியாகத் தாக்குதல் நடத்தியிருப்பது இந்தச் சமத்துவத்தின் மீதுதான். யாழ்ப்பாணம் நூலகத்தை இன வெறியர்கள் தீயிட்டு அழித்தார்கள். அண்ணா நூலகத்தை ஜெயலலிதா இடம் மாற்றி அழிக்கப்போகிறார். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை!
நூலகம் இருக்கும் இடத்தில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை கொண்டுவரப்படுவதன் மூலம் தமிழகம் குழந்தைகள் நல மருத்துவத்தில் முன்மாதிரி மாநிலமாக மாறும் என்று அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
தமிழகத்தில் குழந்தைகள் நல மருத்துவத்தில் அரசு காட்டும் அக்கறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம், சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் மருத்துவமனை. 1968-ல் பெரிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 40 துறைகள் இருக்கின்றன. துறைகள் அளவில் ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை இது.
இன்றைக்கு இந்த மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறையில் அறுவை சிகிச்சை செய்ய நிபுணர்கள் கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் கிடையாது. இதய நோய்ப் பிரிவில், இதய செயல்பாட் டைத் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் கேத் லேப் கருவி கிடையாது. எல்லாத் துறை களும் ஒன்று அல்லது இரண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களை மட்டுமே கொண்டு இயங்குகின்றன. கிட்டத்தட்ட 25 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தது நினைவிருக்கலாம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நலப் பிரிவு இருக்கிறது. அநேகமாக எல்லாமே மருத்துவர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையுடன் தான் இயங்குகின்றன. போதிய மருத்துவர் களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாத நிலையில், வெறும் கட்டடங்களை மட்டும் கட்டிக்கொண்டேபோவதால் யாருக்கு என்ன பயன்?
நிச்சயமாக கருணாநிதியின் சாதனைதான்... அண்ணா நூலகம். மருத்துவமனையின் பெயரால் அதை அழித்துவிடுவதாலேயே கருணாநிதியின் பெயரையும் அழித்துவிட முடியும் என்று ஜெயலலிதா நம்பினால், அது அறியாமை.
தன்னுடைய வார்த்தைகளுக்காக ஜெபர்சன் கடுமையாக உழைத்தார். அவருக்குப் பிந்தைய அமெரிக்க அதிபர்கள் அத்தனை பேரும் உழைத்தார்கள். இன்றைக்கு 460 மொழிகளைச் சேர்ந்த 14.4 கோடிப் புத்தகங்கள், வரைபடங்கள், குறுந்தகடுகள், கையெழுத்துப் பிரதிகளுடன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப் பெரிய நூலகமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆட்சியாளர்களுக்குப் புத்தகங்களுடனும் நூலகங்களுடனும் இருக்க வேண்டிய தொலைநோக்குப் பார்வைக்கு உதாரணமாக லைப்ரரி ஆஃப் காங்கிரஸும் ஜெபர்சனும் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள்
நன்றி
அனந்த விகடன்
6 பின்னூட்டங்கள்:
ஜெயலலிதாவின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.... இப்படியே போனால் பழைய நிலைக்கு தள்ளப்பட நேரிடும், தமிழகத்தில் எத்தனையோ சீர்திருத்தங்களும் மாற்றங்களும் செய்யவேண்டிய இந்த தருணத்தில் போட்டி மனப்பான்மையுடன் நாட்களை கடத்தினால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், கடந்த கால வரலாற்றை மறந்தவிட்டார் போலும்.... இதே மனபோக்கு தொடருமானால் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டிருக்கும் என்பதை உளவுத்துறை அம்மையாருக்கு தெளிவு படுத்தினால் எதிர்காலம் சிறக்கும்.... குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு வாக்களித்துள்ளது போல் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க ஆவணம் செய்ய வேண்டும் தவறினால் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை முற்றிலும் இழக்க நேரிடும்.... சிந்திப்பாரா அம்மையார்... எதிர்காலமே பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்போம்....:)
இதுதான் அம்மாவின் (பொற்க்கால) போர் க்கால ஆட்சியோ.
அல்லது தீ(ர்)கால ஆட்சியோ.
நீங்கள் என்னதான் ஜெயா நூலகம் என்று மாற்றினாலும் அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
காரணம்.................
ஒருவரை எரித்தால் ஒரு உயிர் போகும்.
ஒரு நூலகத்தை எரித்தால் (மனதில்) உயிரோடு இருக்கும் பல சரித்திரத்தை அழித்து விடலாம்.
அம்மாவுக்கு சில யோசனை நம்மூர் அதிமுக காரர்கள் சொல்லலாம்.
1 நூலக வாசலில் அம்மா போட்டாவை வைக்கணும். (எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அதை எடுக்கக்கூடாது. மாறாக வேறு யாரு போட்டோவும் வைக்ககூடாது.
2 அம்மா என்று சொல்லடா, அடிமை என்று நில்லடா - என்ற வாசகம் பெரிய கொட்டெழுத்தில் இருக்க வேண்டும்.
3 அம்மா நடித்த படத்தை ஒவ்வொன்றையும் பத்து பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்திற்கு விளக்கவுரை கொடுத்து குறைந்தது 1000 புத்தகமாவது அந்த நூலகத்தில் வைக்கணும்.
4 அதன் சிலவை, நம்மூர் பாதாள சாக்கடைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
******துக்ளக் நியூஸ்*******
அழகிய தமிழ் மகன்களா......தெரியாதா உங்களுக்கு அரசியல்வாதிகளின் மந்திர வார்த்தை.....
நாளை என்பது இல்லை...
நீ.....
இன்றே செய்யணும் தொல்லை.
நன்றே அடிக்கணும் கொள்ளை....
"பன்னீர் செல்வம் அண்ணா....முன்னமாதிரி ரெடியாக இருங்கள்", எட்டியூரப்பா உங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டார்.
கிராமப்புறங்களில் நூலகங்கள் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த பிரமாண்டமான நூலகம் கட்டப்பட்டது கடந்த ஆட்சியில்
கிராமப்புற மாணவர்களுக்கும் மக்களுக்கும் செல்ல இருந்த அறிவு களஞ்சிய நூலகம் எல்லாம் கொட்டுர்புரம் அல்லது சென்னை மாணவர்களுக்கும் மக்களுக்கும் சென்றது அநிதி
நண்டுபிடிக்கும் நரி கதை சொல்லுவது போல இந்த அம்மையாரின் நடவடிக்கையும் அமைந்துள்ளது
அதாவது மிண்டும் கிராமப்புறங்களில் நூலகங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக இதைவிட பிரமனடமான நூலகம் அமைக்க போவதாக உயர்நிதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஜெயா அரசு
இதை பார்க்கும் என்னை போன்ற கிராமவாசிகள் சொல்லுகிறார்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது இதுதானோ
நல்ல சொன்னிங்க முகமது நல்ல அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்
எல்லா அரசியல்வாதிகளும் எடுக்கும் அரசியல் அலட்டல்தான் இதுவும். ஆனால் மற்றவர் இதுபோன்ற காரியங்களில் கொஞ்சமாவது தயக்கம் காட்டுவர். ஜெயலலிதாவுக்கு தயக்கம் என்பதெல்லாம் அறவே இல்லை. கோபமும், தான் என்ற கர்வமும் அதிகம். மதமாச்சரியங்களுக்கு கட்டுண்டவர்.
கருணாநிதிக்கு இலஞ்சம் என்பது முதலாம் நிலை. ஜெயலலிதாவுக்கு மதம் முதலாம் நிலை.
இதில் முஸ்லிம்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment