அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 22, 2011

தீதும் நன்றும் பிறர் தர வாரா

'பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்பார் வள்ளுவப் பேராசான். அதாவது, தவறான ஆலோசனைகளைக் கூறுபவர்களை அரசன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது எழுபது கோடிப் பகைவர்கள் இருப்பதற்குச் சமம் என்று பொருள். தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் பஸ் கட்டண உயர்வும் ஏனைய மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வும், அந்தக் குறளைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

எந்தவோர் அரசும் வரிகள் போடாமலோ, கட்டணங்களை உயர்த்தாமலோ செயல்பட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், வரிகளை அதிகரிப்பதும் கட்டணங்களை உயர்த்துவதும் வேறு வழியே இல்லாத நிலையில் அரசு எடுக்க வேண்டிய கடைசி முடிவாக இருக்க முடியுமே தவிர, நிர்வாகக் குறைபாடுகளையும் நஷ்டங்களையும் ஈடுகட்ட வரி போடுவதும், கட்டணங்களை உயர்த்திக்கொண்டே போவதும் தீர்வாக இருக்க முடியாது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையும் சரி, மின்சார வாரியமும் சரி, ஆவின் நிறுவனமும் சரி தொடர்ந்து நஷ்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பது நீண்டகால நடைமுறையாகவே மாறிவிட்டது. தொடர்ந்து ஆட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர, இந்த மூன்று அமைப்புகளிலும் காட்சி மட்டும் மாறாமலே தொடர்கிறது. இந்த அமைப்புகளின் நிர்வாகச் சீர்கேடுகளை அகற்றி, குறைந்தபட்சம் அகற்ற முயற்சி செய்துவிட்டு, பிறகு கட்டண உயர்வுக்கு அரசு முனைந்திருக்குமானால் யாரும் குற்றம் கூறி இருக்க வழியே இல்லை.

அரசுப் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்தை இந்தக் கட்டண உயர்வு குறைக்கப் போகிறது என்பது வெறும் பகல்கனவாகத்தான் இருக்கும். கூடுதல் வசூல், கூடுதல் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கப் போகிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திடீர் பஸ் கட்டண உயர்வால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி என்பது ஒட்டுமொத்தமாக முதல்வர் ஜெயலலிதாவின் தோள்களில் மட்டுமே இறக்கப்படுமே தவிர, கட்டணத்தைக் கூட்டி நஷ்டத்தைச் சரிப்படுத்தி விடலாம் என்று தவறான ஆலோசனை வழங்கிய அதிகாரிகளைப் பாதிக்கப் போவதில்லை.

முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல, போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலைமையில் இருக்கின்றன. இதற்கு முந்தைய திமுக அரசு, அரசியல் நோக்கத்துடன் டீசல் விலையேற்றத்திற்கேற்பக் கட்டணங்களை அதிகரிக்காததுதான் காரணம் என்பதும் உண்மை. பத்தாண்டுகளாக உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், கட்டண உயர்வு எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்கிற அறிவிப்பை மக்களிடம் வெளிப்படையாகச் சொல்லாமல் இரவோடு இரவாக உயர்த்தியதன் விளைவு, மக்கள் கொதித்துப் போய் அரசை வசைமாரி பொழியத் தொடங்கிவிட்டனர்.

சென்னையில் மட்டும் மொத்தம் 3,140 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் தினசரி 55 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். வேலைக்குப் போய்த் திரும்ப சென்னை மாநகரப் போக்குவரத்துதான் பெரும்பாலோரின் வாகனமாகத் தொடர்கிறது. தமிழகம் முழுக்க 21,169 அரசுப் போக்குவரத்து பஸ்கள் ஓடுகின்றன. இதில் தினசரி 2 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஏறத்தாழ மூன்று கோடி பேர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ஊர்திகளின் கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்துவது எந்த விதத்தில் சரி?

பல விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அலுவலகத்தில் கணக்கர்களாக, உதவியாளர்களாக, துப்புரவுத் தொழிலாளர்களாக, சிறு சிறு தொழிற்சாலைப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்கள்தான் அரசு பஸ்களில் பெருவாரியாகப் பயணிப்பவர்கள். அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் ஏராளம் ஏராளம். கையில் அன்றாடம் தேவைக்கான பஸ் கட்டணத்துடன் வேலைக்குப் போகிறவர், உயர்த்தப்பட்ட கட்டணத்தால் அதிர்ச்சி அடைந்து வேலைக்குப் போகாமல் வீடு திரும்பிய அவலம் பல இடங்களில் ஏற்பட்டதே, இதெல்லாம் அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்?

மூன்று ரூபாயுடன் பஸ்ஸில் ஏறி ஒரு கிலோ மீட்டர் பயணித்த பிறகு, கட்டணம் ஆறு ரூபாய் என்கிற அதிர்ச்சிச் செய்தி கேட்டு, வழியில் இறங்கித் திரும்பி நடந்தவர்கள் அதிகாரிகளைத் திட்டவில்லை. முதல்வரை வசைபாடினார்கள். இப்படி நடக்கும் என்பதை முன்கூட்டியே முதல்வருக்குத் தெரிவித்து, முறையான அறிவிப்புடன் கட்டண உயர்வை படிப்படியாக ஏற்றுவதற்கு அறிவுறுத்த வேண்டிய அதிகாரிகள் செய்த தவறுக்கு முதல்வரும் அரசும் பொறுப்பேற்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.

இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. இத்தனை நிதிச் சுமையுடன் இலவசங்களை விநியோகிப்பதை ஒத்திவைத்துவிட்டு, அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கலாம். "டாஸ்மாக்' மது ரகங்களின் விலையை இரட்டிப்பாக்கி போக்குவரத்துக் கழக, மின்வாரியக் கடன் சுமையை சற்று இறக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

பஸ் கட்டண, மின் கட்டண, பால் விலை உயர்வுக்கான காரணங்களை எடுத்துக்கூறி, ஏன் இந்தக் கட்டண உயர்வு என்பதற்கான தன்னிலை விளக்கத்துடன்கூடிய முதல்வரின் அறிக்கையில் உள்ள அத்தனை நியாயங்களையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறோம். ஆனால்...

உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத் தாங்கிக் கொள்ளத் தயார். பாரத்தை ஏற்றி வையுங்கள், தாங்குவார்கள். அதற்காக, பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது மக்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும்கூடப் பொருந்தும்!

நன்றி தினமணி

6 பின்னூட்டங்கள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சென்னை-திருச்சி 2 மடங்கு:

சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 105 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் ரூ. 195 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. இது கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

அதே போல சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 175 ஆக இருந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி - ரூ.505 (பழைய கட்டணம் ரூ.380)

சென்னை - நாகப்பட்டினம் - ரூ.240 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தூத்துக்குடி - ரூ.425 (பழைய கட்டணம் ரூ.315)

சென்னை - கும்பகோணம் - ரூ.225 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தேனி - ரூ.355 (பழைய கட்டணம் ரூ.270)

சென்னை - செங்கோட்டை - ரூ.445 (பழைய கட்டணம் ரூ.330)

அம்மா.....! copy@paste

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்\
அரசை குறை கூறி பயன் இல்லை, மக்கள் சரியாக இருந்தால் வரக்கூடிய வரகூடிய அரசு சரியாக அமையும் என்பது இறை நியதி.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அம்மா பதவிஎர்ப்புக்கு முன்னாடி, கேடியான மோடி அம்மாவிடம் சொன்ன யோசனையின் பிரதிபலிப்புத்தான் இது. காவிரி - கங்கையில் குளித்த மங்கையே நீர் தமிழ்நாட்டு முஸ்லிம்களை நசுக்கி விடுங்கள் என்றார். ஆனால் மைக்கு சத்தம் அதிகமாக இருந்ததால் "முஸ்லிம்" என்ற வார்த்தைக்கு பதிலா "மக்கள்" என்று விளங்கிவிட்டது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதால் (நம்ம முதல்வர் உள்பட) வடநாட்டு நடிகைகள் தமிழ் கற்று பேசுவது போல், வடநாட்டு அயோக்கியனுக்கும் கொஞ்சம் தமிழ் தெரியுமோ என்னவோ.

பெரும் பணக்காரி ஒரு ஜோடி செருப்பு எடுப்பதற்கு 20 செருப்பை பார்த்து அதில் ஒன்றை வாங்கி விடுவாள். ஆனால் நம்ம "அம்மா" ஒரு ஜோடி செருப்பு வாங்குவதற்காக 50 ஜோடி செருப்பை வாங்க சொல்லிவிடுவார். எல்லாமே மொத்த வியாபாரியைப்போல் செயல்படுவதால் இந்த விலை உயர்வும் ஒரு எடுத்துக்காட்டு.

Shahul.Hameed, Abu Dhabi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது அரசாங்க பேருந்துக்காக மட்டுமா? சென்னை அதிரை தனியார் பேருந்து கட்டணத்தில் ஏதும் தாக்கம் உண்டா?

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கலைஞர் ஆட்சியில் விலைவாசி உயர்வுக்காக மாபெரும் ஆர்பாட்டம் நடத்திய இந்த பெண்மணி..... தான் ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன் தனக்கே உரிய அகங்கார ஆட்சி நடத்தி மக்களை நசுக்குகிறது.....நிர்வகிக்க தெரியாவிட்டால் சிறந்த நிர்வாகியை தேர்ந்து எடுக்க வேண்டிய ஜெ அதை விடுத்து எந்த ஆட்சியாளரும் செய்யாத பல்முனை தாக்குதல் நடத்துகிறது..... அரசு பஸ் நிறுவனங்களை போன்று தான் தனியாரும் நடத்துகிறார்கள் அவர்களுக்கு கட்டுபடியாகும் செலவீனங்கள் ஏன் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கட்டுபடியாகவில்லை ? நிர்வாக கோளாறும், பொருளாதார முறைகேடும் தான் இந்த இழப்பிற்கு காரணம் இதை அறியாத ஜெ. மக்களை மாக்காளாக்க நினைக்கிறார்..... நிர்வாகத்தை மட்டும் தனியாரிடம் ஒப்படைத்தால் லாபம் கொழிக்கும் திருந்துமா இந்த ஜெ ...?

தலைத்தனையன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொல்லைய்யன் கலைஞரும் சரி, மதம் பிடித்த செயலலிதாவும் சரி இலவசங்களை குறைத்து, மாநாடுகள், சிலை திறப்பு விழாக்களைக் குறைத்து, தோழிகள், வாரியத்தலைவர்கள் உட்பட மற்ற கழகக் கண் (குருடர்களின்)மணிகளின் ஊழலைக் குறைத்தாலே போதும் வரி ஏற்றம் அவசியமில்லாமல் போய்விடும்.

MOHAMED THAMEEM

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.