வெற்றி வெளிச்சம்
-
உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள்
நமது பூமியில் எதுவுமில்லை;
உணர்ந்து தெளிந்து முனைந்தவர்
தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை.
” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் அத்தனைபேருமே தோல்விகளை பல முனையில் சந்தித்து, அதையும் மீறி வந்தவர்கள்தாம். ”என்னதான் இருந்தாலும் உங்க சாதனை அற்புதம் சார்” என்று பாராட்டும் போது, ”அய்யோ. அதெல்லாம் இல்லீங்க. கூட்டு முயற்சி. ஆண்டவன் செயல்” என்று அவர்கள் சொல்லும்போது, ”ஆஹா. என்ன ஒரு அடக்கம், பெருந்தன்மை” என்று மேலும் அவரைப் பாராட்டுவோம்.
ஆனால் அந்த மனிதர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவருக்குத் தெரிவதால்தான் அந்தக் கூச்சமும், அடக்கமும். ஏனெனில் அவரது வெற்றிக்குப்பின் நிச்சயம் தோல்விகள், சரிவுகள், அவமானங்கள் நிரம்பியிருக்கும். அதை அவர் கையாண்ட விதம், மன உளைச்சல்களைத் தாங்கி நாட்களைக் கடத்திய விதம், முகத்தில் சிரிப்பையும், உள்ளத்தில் ரணத்தின் வலியையும் ஒரே நேரத்தில் கையாண்ட விதம், மனைவி, நண்பர்கள் இடத்தில்கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் படுக்கையில் பல நாட்கள் புரண்டு புரண்டு படுத்த காலங்கள், தோல்வியின் போது மற்றவரது அலட்சியப்பார்வைகள், உதாசீனப் பேச்சுக்கள், கையறு நிலையில் கடந்து வந்த அனுபவங்கள் – இவைதான் அனுபவம் தந்த வெற்றிப்பாடங்கள்.
தோல்வி என்ற இருளில் ஒருவன் நடந்து செல்லும்போது, அவனது நிழல்கூட அவனுடன் வருவதில்லை. வெற்றி வெளிச்சத்தில் சுற்றியுள்ள எல்லாமும் சிவப்புக் கம்பள விரிப்பில் வரவேற்று வாழ்த்துகின்றன. எந்த ஒரு மனிதன் இருளில் நடக்கத் துணிகின்றானோ, நடந்து பழக தயாராக இருக்கிறானோ, தடுமாறி விழுந்து எழுந்து நடக்கின்றானோ, அவனே பகலில் சிவப்புக்கம்பள விரிப்பில் தலை நிமிர்ந்து வழிகாட்டியாகச் செல்ல முடியும். ஒரு விதத்தில் முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்கள் பல இன்னல்களுக் கிடையே தொழிலை நடத்தும்போது ஏற்படும் சோதனைகளும், தோல்விகளும் பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்துமானால் அவர்கள் தொழிலைத் தொடர்வது சிரமம். அதில் சோர்ந்து போகாமல் குடும்பம், நட்பு, உறவு முறைகளில் பொருளுதவி பெற்று மேடேறிப் பின்னர் வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.
ஆனால், பொருளாதாரப் பாதிப்பின் சுமை தாங்க முடியாமல், ‘வேண்டாம். இந்த விபரீதம்’ என்று இடையிலேயே விட்டுவிட்டுப் பணிக்குச் சென்றவர்கள் பல ஆயிரம்.
இரண்டாவது, மூன்றாவது தலை முறையாகத் தொழில் செய்பவர்களுக்குப் பொருள் பிரச்சனை பெரிதாக இருக்காது. ஆனால் விரிவு படுத்தவும், இருப்பதைச் சிறப்பாகக் காப்பாற்றிக் கொள்ளவும் தேவையான திறமைகளும், ஆற்றலும் தேவைப்படுகின்றன.
எல்லாவற்றையும் விட வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும் நாம் மட்டுமே காரணமல்ல என்பதையும் உணருகின்ற பக்குவம் வேண்டும். தோல்வியுற்ற நேரத்தில் ஒரு தொழில் முனை வோரிடம் தோல்விக்கான உண்மையான காரணங் களைக் கேளுங்கள். கீழ்க்கண்டவாறு பதில்கள் கிடைக்கும்.
- சரியான சமயத்தில் வங்கியிலிருந்தும், எதிர் பார்த்த இடத்திலிருந்தும் பணம் கிடைக்கவில்லை. வாக்கு கொடுத்தவர்கள் ஏமாற்றி விட்டார்கள்.
- தயாரிப்பிலுள்ள பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மூலப்பொருட்களின் எதிர் பாராத விலையேற்றம் பாதித்துவிட்டது.
- சந்தை சரியில்லை. முகவர்கள் உதவி செய்ய முன்வரவில்லை.
- பணியாட்கள், மேனேஜர்கள் ஒத்துழைப்பு சரியில்லை. நிறைய தரக்குறைவான பொருட்களைச் சரியாகப் பார்க்காமல் சந்தைக்கு அனுப்பியதில் நட்டம் மிக அதிகம்.
-தொழில் நுட்பமும், இயந்திரமும் பழையவை. புதிதாக உருவாக்கப் பொருள் வசதியோ, ஆய்வு வசதிகளோ இல்லை.
- போட்டியாளர்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கிறார்கள். எதிர்கொள்ள இயலவில்லை.
வழக்கமாக இதில் ஒன்றிரண்டோ, அல்லது எல்லாமும்தான் தோல்விக்குக் காரணம் எனும் போது, வெற்றி பெற்றவர்களைக் கேட்டால் பெரும் பான்மையானவர்கள் மேற்சொன்ன காரணங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கத்தோடு, தங்கள் முடிவெடுக்கும் திறமையும், தலைமைப்பண்பும் தான் வெற்றிக்குக் காரணம் என்று கூறுவார்கள். உண்மைதான்.
ஆகக்கூடி, மேற்கூறிய காரணங்களோடு, தோல்வியுற்றவர் எடுத்த சில தவறான முடிவுகளும், தலைமை செய்த சில தவறுகளும் தோல்விக்குக் காரணம் என்பது உறுதியாகின்றது.
நான் செய்த தவறு என்பதை மனதார உணர்ந்து, அதைக் கூச்சமின்றி ஒப்புக் கொண்டு, மீண்டும் முயற்சி செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அளவு மாறலாம். ஆனால் வெற்றியின் தன்மை மாறாது. ஒரு சில உதாரணங்களை உங்கள் முன் வைக்கின்றேன்.
நண்பரின் உறவினர். வடநாட்டில் மிகப் புகழ்பெற்ற காலணி தயாரிப்பில் சிறந்து விளங்குபவர். ஏற்றுமதியிலும் சரி, உள் நாட்டு வணிகத்திலும் சரி, கொடி கட்டிப் பறப்பவர். நிறுவனத்தின் பெயர் அகில உலகிலும் புகழ் பெற்றது. ஒரு சமயம், சில காரணங்களை முன்னிட்டு, மருந்து தயாரிக்கும் ஒரு தொழிற் சாலையில் முதலீடு செய்து அதில் தீவிர ஈடுபாட்டோடு உழைக்க ஆரம்பித்தார். ஆனால் ஓரிரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்போடு அந்தத் தொழிலை விட்டுவிட்டு, தனது தொழிலி லேயே மீண்டும் ஈடுபட ஆரம்பித்தார்.
இன்னொரு நண்பர். அவரும் வட நாட்டைச் சேர்ந்தவர்தான். பல பொருட் களை, உதிரிப் பாகங்களை, சிறிய இயந்திரங் களை பஞ்சாலைக்கு விற்கும் நிறுவனத்தைத் திறம் பட நடத்தி வந்தார்.
உற்பத்தியாளர்களிடம் பொருட்களை வாங்கி, ஒரு நல்ல லாபத்துடன் வாடிக்கை யாளர்க்கு விற்று, ஒரு மிக முக்கியமான முகவர் செய்ய வேண்டிய புதுமையைப் புகுத்தி, பணியாளர் களுக்கு நல்ல சம்பளமும், ஊக்கத்தொகையும் கொடுத்து, அகில இந்தியாவிலும் கிளைகளை நிறுவி, மற்ற முகவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இவரது அறிவுரைகளை மதித்துச் செயல்பட்டு விரிவாக்கம் செய்தன. பல பஞ்சாலை அதிபர்களும் இவரைத் தங்களது ஆலைகளுக்கு ஆலோசகராகவும் நியமித்தனர். இந்த அளவு சிறப்புகளைப் பெற்றவர், அண்டை மாநிலத்தில் ஒரு தொழிலைத் தொடங்கினார். பிளாஸ்டிக் சம்பந்தப் பட்ட அந்தத் தொழில், நவீன இயந்திரங்களுடன் அரசாங்க உதவியுடன் தொடங்கப்பட்டது.
தொடங்கிய மூன்றாண்டுகளில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. பொருள் நஷ்டத்தோடு பல விதமான இடையூறுகளும் சேர்ந்து நண்பரது நல்ல பெயருக்கும் களங்கம் ஏற்பட்டது. அவரைப் போற்றிக் கொண்டாடியவர்கள் கூட நேரடியாகவே ஏளனம் செய்வதோடு, குறைகூறவும் ஆரம்பித்தனர்.
அந்த நிறுவனத்தை பல இன்னல்களுக் கிடையில், வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, தன்னுடைய பல சொத்துக்களையும் விற்றுக் கடனை அடைத்தார். அவரது பழைய தொழில்கூட பாதிக்கப்பட்டது. ஆனால், கடும் உழைப்போடு முயற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்தார். ஆயினும் பத்தாண்டுகளில் அவரது உழைப்பு, உடல் நலம், பலம், எல்லாமே விரயமாகி விட்டன.
எந்த அளவிற்கு வெற்றியின் உச்சம் தொட்டாரோ, அதே அளவு தோல்வியின் ஆழத்தையும் உணர்ந்தார்.
மூன்றாவதாக தென்னகத்தைச் சார்ந்த ஒரு பிரபல தொழில்குடும்பம். ஒரு குறிப்பிட்ட துறையில் கொடிகட்டிப் பறந்தனர். இளைய தலை முறையினர் எத்தனை நாட்களுக்கு ஒரே துறையில் தொழில் செய்வது, ஏன் மாற்றுத் துறையில் முயற்சி செய்யக்கூடாது என்று சிந்தித்து சம்பந்தமே இல்லாத தங்களுக்கு முன் அனுபவமும் இல்லாத ஒரு துறை சார்ந்த தொழிலை பல கோடி ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பித்தனர்.
மிகுந்த செல்வாக்கும், பண பலமும், அரசாங்க உதவியும், நல்ல மனதும், கடும் உழைப்பும் இருந்தும் பலகோடி இழப்புடன் புதிய தொழிலை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்று விட்டு, இன்று தங்களது குடும்பத்தொழிலில் மும்முரமாக இறங்கி, இழப்பை மீட்கும் வேகத்துடன் செயல்படுகிறார்கள்.
இந்த மூன்று உதாரணங்களும், தொழில் முனைவோர்கள், வாசகர்கள் மத்தியில் ஒரு பய உணர்வைத் தோற்று விக்க வேண்டும் என்றோ, அல்லது ஒருவர் வேறு தொழில் ஆரம்பித்தால் மிகவும் கஷ்டப்படுவார். அதனால் செய்வதையே திருப்தியுடன் செய்யுங்கள் என்றோ – தவறான கருத்தைப் பதிவு செய்வது என்ற நோக்கத் துடன் சுட்டிக் காட்டப் பட்டதல்ல. ஒரு துறையில் வென்றிருக்கின்றார்கள்.
அந்த வெற்றிக்கான அடிப்படை குணங்களில் எதையும் அவர்கள் விட்டுவிட வில்லை. சொல்லப்போனால், ஆரம்பத்தில் இருந்ததைவிடவும், பல அனுபவங்களோடு மிகவும் கடினமாக உழைத்திருக்கின் றார்கள். ஆயினும் தோல்வி கண்டுள்ளார்கள்.
இவர்களால் நடத்த முடியாத அதே தொழிலை, அந்த நிறுவனங்களை விலைக்கு வாங்கியவர்கள் அந்தத் தொழில்களை லாபகரமாக இயக்கி வருகின்றார்கள்.
எனவே, வெற்றிக்கும், தோல்விக்கும் இதுதான் சரியான சூத்திரம் என்று யாருமே வகுக்க முடியாது என்பதை வாசகர்கள் உணரவேண்டும்.
நம்பிக்கை, கடும் உழைப்பு, நேர்மை, நாணயம், சந்தை மதிப்பு, கூட்டு முயற்சி, தொழிலாளர் ஒத்துழைப்பு, தரமான பொருட்கள், அரசு உதவி, நல்ல மேனேஜர்கள், முகவர்கள் என்ற அடிப்படை அமைப்பு எல்லாம் அனைவருக்கும் பொது வானவையே.
வெற்றிக்கதைகளும், நம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்களும், உணர்ச்சி ஊட்டும் தேர்ந்த சொற்பொழி வாளர்களின் உற்சாகத் தூண்டுதலும் அனைவருக்கும் வழிகாட்டும் பொதுத்தன்மை கொண்டவைதான்.
வெற்றியின் போதையில் கொண்டாடுவதும், தோல்வியில் துவண்டு சோர்ந்து போய்விடுவதும் தேவை அற்றவை.
இந்த நிதர்சனங்களையும், எதார்த்தங்களையும் உணர்ந்து செயல்படுங்கள். அப்போது உங்கள்மீது படுகின்ற வெளிச்சம் இருக்கின்றதல்லவா, அதுதான் உண்மையான வெற்றி வெளிச்சம். அந்தப் புதுவெளிச்சம் வெற்றிக்கான உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கும்.
தோல்வி என்ற ஒன்று கிடையவே கிடையாது. அது ஓர் அனுபவம். வாழ்வியல் பயணத்தில் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு என்பதையும் உணர வைக்கும்.